கரும்பு தோட்டங்களில் பணி புரிவதற்கு கருப்பையை நீக்கும் பெண்கள்


சமீபத்திய மாதங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாதவிடாய் தொடர்பாக வந்த இரண்டு செய்திகள் நம்மை வருத்தமடைய செய்வதாக உள்ளன.
இந்தியாவில் மாதவிடாய் என்பது இன்றும் அதிகம் பேசப்படாத ஒரு விஷயமாகவே உள்ளது. மாதவிடாய் காலப் பெண்கள் அழுக்கானவர்களாகவே கருதப்படுகின்றனர். மேலும் சமூக மற்றும் சமய நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் தள்ளியே வைக்கப்படுகின்றனர்.
சமீப வருடங்களில் இந்த நடைமுறைகள் நகர்ப்புற படித்த பெண்களால் சற்று தளர்த்தப்பட்டு வருகிறது என்று சொல்லலாம்.
இருப்பினும் அந்த சமீபத்திய இரண்டு செய்திகள் மாதவிடாய் தொடர்பாக இந்தியாவில் நிலவும் பிரச்சனைக்குரிய சூழலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.
பெரும்பாலான பெண்கள், குறிப்பாக கல்வி கற்காத ஏழை குடும்பத்து பெண்கள் தங்களின் உடல்நலத்திலும், வாழ்க்கை முறைகளிலும் நீங்காத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முதலாவது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் தங்களின் கருப்பைகளை அகற்றுகின்றனர் என இந்திய ஊடகங்களில் வந்த செய்தி.
அதில் பெரும்பாலானோர்கள் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அவ்வாறான அறுவை சிகிச்சைகளை செய்திருக்கின்றனர்.
ஓவ்வொரு வருடமும் மகாராஷ்டிராவின் பீட், ஆஸ்மானாபாத், சங்க்லி மற்றும் சோலாப்பூர் மாவட்டத்தில் இருந்து பிழைப்பு தேடி கரும்பு பயிரிடும் பகுதியான மேற்கு மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வருகின்றன. அந்த கரும்புத் தோட்டங்களில் ஆறுமாத காலம் தங்கி அறுவடை வேலைகளை அவர்கள் செய்வதற்காக அங்கு வருகின்றனர்.
அவர்கள் அங்கு பணிக்கு வந்ததும், பேராசை மிக்க ஒப்பந்தக்காரர்கள் அனைத்து விதமான சந்தர்பங்களிலும் அவர்களிடமிருந்து அதிகப்படியான வேலைகளை வாங்கிக் கொள்கின்றனர்.
கரும்பு தோட்டங்களில் பணி புரிவதற்கு கருப்பையை நீக்கும் பெண்கள்படத்தின் காப்புரிமைAFP
முதலில் இவர்கள் பெண்களை பணிக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். ஏனென்றால் கரும்பு வெட்டுதல் ஒரு கடினமான பணி. மேலும் மாதவிடாய் காரணங்களால் அவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் பணிக்கு வரமுடியாமல் போகலாம் என்பதும் அவர்களின் தயக்கத்துக்கு ஒரு காரணம். அவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும்.
பணியிடங்களில் தங்கும் நிலை மிக மோசமான ஒன்று. கரும்பு தோட்டங்களுக்கு அருகாமையில் கூடாரங்களிலோ அல்லது சிறிய குடிசைகளிலோ அவர்கள் வசிக்க வேண்டியுள்ளது. அங்கு கழிப்பறைகள் இருக்காது. கரும்பு அறுவடை சில நேரங்களில் இரவு நேரங்களில் கூட நடைபெறும். எனவே தூங்குவதற்கோ அல்லது தூக்கத்திலிருந்து எழுவதற்கோ குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அது மிகவும் கடின ஒரு காலமாக அமைந்துவிடும்.
எனவே மோசமான சுகாதார சூழலால் அங்குள்ள பெண்கள் பல நோய் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். அந்த பகுதியில் பணிபுரியும் ஆர்வலர்கள், `மனசாட்சியற்ற` சில மருத்துவர்கள், மருந்துகளில் குணமடையக்கூடிய வகையில் உள்ள சிறிய பிரச்சனைகளுக்குக் கூட கருப்பையை எடுக்க பரிந்துரை செய்வதாக கூறுகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே திருமணமானவர்கள். அவர்களுக்கு இருபத்தைந்து வயதுக்குள்ளாக திருமணமாகி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ளன. எனவே கருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மருத்துவர்கள் சரியாக விளக்காததால் அவர்கள் கருப்பையை எடுப்பது சரி என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள பல கிராமங்கள் `கருப்பையற்ற பெண்களை கொண்ட கிராமங்களாக` உள்ளன.
இந்த விஷயம் தொடர்பாக கடந்த மாதம் மகாராஷ்டிர மாநில சட்டசபை உறுப்பினர் நீலம் கோர்ஹே கேள்வி எழுப்பிய போது, "மூன்று வருடங்களில் பீட் மாவட்டத்தில் மட்டும் 4,605 கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன." என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது அனைத்தும் கரும்பு தோட்டங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நடத்தப்பட்டவை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான பல வழக்குகள் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பீட் மாவட்டத்தில் உள்ள வஞ்சர்வாடி கிராமத்திற்கு, என்னுடன் பணிபுரியும் பிபிசி மராத்தி சேவையை சேர்ந்த சக பத்திரிகையாளர், ப்ரஜக்தா துலப் பயணம் செய்தார். ஒவ்வொரு வருடமும் அக்டோபரிலிருந்து மார்ச் மாதம் வரை 80 சதவீத கிராம மக்கள் கரும்பு தோட்டங்களில் பணிபுரிவதற்காக அங்கிருந்து இடம் பெயர்வதாக அவர் தெரிவிக்கிறார்.
கரும்பு தோட்டங்களில் பணி புரிவதற்கு கருப்பையை நீக்கும் பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அந்த கிராமத்தில் உள்ள பாதி பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சையை செய்து கொண்டனர் என்றும் அதில் பலர் 40 வயதுக்கு குறைவானவர்கள் என்றும், இன்னும் சிலர் தங்களின் இருபதுகளில்தான் உள்ளனர் என்றும் தெரிவிக்கிறார் ப்ரஜக்தா.
பல பெண்கள் அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு தங்களின் உடல்நலம் மேலும் மோசமடைந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். அதில் ஒரு பெண் இந்த அறுவை சிகிச்சையால் தனக்கு தொடர்ந்து முதுகு வலி, கழுத்து வலி மற்றும் முட்டி வலி ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் காலையில் எழுந்தவுடன் தனது கைகள், முகம் மற்றும் பாதங்கள் வீங்கிவிடுவதாக அவர் தெரிவித்தார். மற்றொரு பெண் தனக்கு தொடர்ந்து மயக்க நிலை ஏற்படுவதாகவும், சிறிய தொலைவில் கூட நடந்து செல்ல முடியவில்லை என்றும் கூறுகிறார். எனவே இதன் காரணமாக இருவரும் இனி கரும்பு தோட்டங்களில் அவர்களால் பணி புரிய இயலாது.
இரண்டாவது செய்தி தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பல பில்லியன் கணக்கான வருவாய் ஈட்டும் ஆடை தொழிற்சாலைகளில், மாதவிடாய் சமயங்களில் வரும் வலியை தவிர்க்க அங்கு பணிபுரியும் பெண்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
மாதவிடாய் காலங்களில் வலி வந்தால் அவர்களுக்கு ஓய்வு வழங்குவதற்கு பதிலாக மாத்திரைகளை வழங்குகின்றனர்.
தாம்சன் ராயடர்ஸ் ஃபவுண்டேஷன், 100 பெண்களிடம் எடுத்த நேர்காணலில், அந்த மருந்துகள் பெரும்பாலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
தையல் பணியில் ஈடுபடும் ஏழை குடும்பத்தை சேர்ந்த அந்த பெண்கள், மாதவிடாய் வலியால் தங்களால் ஒருநாள் ஊதியத்தை இழக்க முடியாது என்று தெரிவிக்கின்றனர்.
கரும்பு தோட்டங்களில் பணி புரிவதற்கு கருப்பையை நீக்கும் பெண்கள்படத்தின் காப்புரிமைPIYUSH NAGPAL
நேர்காணல் செய்யப்பட்ட 100 பெண்களும், தங்களுக்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டது என்றும், அதில் பாதி பேர் தங்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
அந்த மாத்திரைகளின் பெயர்கள் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்தும் தங்களுக்கு கூறப்படுவதில்லை என்கின்றனர் அப்பெண்கள்.
இந்த மருந்துகளால், மன அழுத்தம், பதற்றம், கருப்பையில் கட்டிகள், சிறுநீர் குழாயில் தொற்று, கருக்கலைப்பு போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக அந்த பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அறிக்கை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளியது.
தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிராவில் நிலவும் நிலையை "பரிதாபகரமான மற்றும் மோசமான" ஒன்று என தெரிவித்துள்ளது.
மேலும் இம்மாதிரியான "கொடுமைகள்" எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களின் உடல்நலம் குறித்து கண்காணிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாலினங்களுக்கு ஏற்ற கொள்கைகளை கொண்டு உலக முழுவதும் பணியிடங்களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தருணத்தில் இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.
பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு 2005 -06 ஆண்டுகளில் 36 சதவீதமாக இருந்துள்ளது, 2015 -16 ஆம் ஆண்டுகளில் அது 25.8 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் எந்த சூழல்களில் பெண்கள் பணிபுரிய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதே.
இந்தோனீசியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் சில நாடுகளில், பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். பல தனியார் நிறுவனங்களும் இந்த சலுகையை வழங்குகிறது.
"இந்தியாவில் பிகார் மாநிலத்தில் பெண்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இது 1992ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது." என நிதி ஆயோக்கின் பொது கொள்கை நிபுணர் ஊர்வஷி பிரசாத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் பெண் எம்பி ஒருவர் இந்தியாவில் பணிபுரியும் ஒவ்வொரு பெண்களும் மாதம் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் மாதவிடாய் சலுகை சட்ட மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
"இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இம்மாதிரியான கொள்கைகளை கொண்டுவருவது ஒரு பெரும் சவால்; குறிப்பாக முறைச்சார தொழில்நிறுவனங்களில்." என்கிறார் உர்வஷி
ஆனால் இது முறையான தொழில்நிறுவனங்களில் தொடங்கப்பட்டால், அது ஒரு மாற்றத்தின் தொடக்கமாக இருக்கும். மேலும் இந்தியாவில் மாதவிடாயை சுற்றியுள்ள எண்ணங்களும் மாறும் என்கிறார் அவர்.
"நமக்கு தேவையானது எல்லாம் வலுவான, ஒருங்கிணைக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்கும் அரசு; அதிகாரத்தில் உள்ளவர்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்."
"ஏதோ ஒரு கட்டத்தில் இதனை நாம் தொடங்க வேண்டும். பின் முறைசாரா நிறுவனங்களிலும் இது நடைமுறைக்கு வந்துவிடும்." என்கிறார் உர்வஷி.
மாதவிடாய் சலுகை சட்ட மசோதா என்பது ஒரு தனிநபர் மசோதா எனவே அது சட்டமாவது கடினம். ஆனால் அது சட்டமானால், தமிழ்நாட்டில் உள்ள தையல் ஆடை தொழிற்சாலைகளில் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் அம்மாதிரியான சலுகைகளின் பயன்கள், இந்தியாவில் பெருமளவில் உள்ள முறைசாரா நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு குறைந்த அளவிலேயே கிடைக்கிறது.
அதன் பொருள் மகராஷ்டிராவில் கரும்பு தோட்டங்களில் பணிபுரிபவர்கள் அவர்களின் ஒப்பந்தக்காரர்களின் கருணைகளிலேயே வாழ வேண்டும் என்பது.