தொற்றா நோய் தடுப்பு குடிசை(NCD HUT)


பாறுக் ஷிஹான்

கல்முனை  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தொற்றா நோய் தடுப்பு குடிசை(NCD HUT)  ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருவதாக  வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் றஹ்மான்   தெரிவித்தார்.

 குறித்த வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை(8) தொற்றா நோய் தடுப்பு குடிசையை அங்குரார்ப்பணம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் தனது கருத்தில்

தொற்றா நோய் உலகில் ஒரு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்களுடைய உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி இன்மையுமாகும்.குறிப்பாக எமது பிரதேசத்தில் தொற்றா நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதில்  அதிகமாக இளவயதினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது எமது அன்றாட   வாழ்க்கை முறையாகும்.இதனை மாற்றியமைக்கும் முகமாக நாங்கள் பல முயற்சிகளை அண்மைக்காலங்களாக மேற்கொண்டு வருகின்றோம்.

அதன் தொடர்ச்சியாக  நாங்கள் இன்று தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் உணவு பழக்கங்களை  மக்கள் மத்தியில் கொண்டு சென்று  அதனை நடைமுறை படுத்தும் நோக்குடன் இவ்வாறான ஆரோக்கியமான உணவு மற்றும் பழக்க வழக்கங்கள்  தொடர்பாக மக்கள் மத்தியில்  விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் ஆரோக்கியமான உணவுகள் கொண்ட சிற்றுண்டிச் சாலையை நிறுவியுள்ளோம்.  எமது வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருவதோடு  பல பகுதிகளிலும் இருந்து நோயாளிகள் வந்து   சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் தொற்றா நோய் சம்பந்தமான விழிப்புணர்வின் அத்தியவசியமாக உணவு பழக்க வழக்கங்களை மாற்றும் நோக்குடனும் இதனை பொதுமக்கள் மத்தியில் எடுத்து செல்லும் நோக்குடனும் இச்சிற்றுண்டிச்சாலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.அத்துடன்  வைத்தியசாலையில் பணியாற்றும்    பணியாளர்கள்  நோயாளர்களை பார்வையிட வரும் மக்கள் என அனைவருக்குமான ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலையாக இது  அமைந்துள்ளது.இங்கே பொது மக்கள் தங்களது உடல் அளவிடை சுட்டி மற்றும் உணவுபழக்க வழக்கங்கள் தொடர்பான துண்டுபிரசுரங்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றி அங்கு உள்ள வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதியர்களிடம்  இது பற்றி ஆலோசனைகளை வழங்க கூடிய வகையில் அமைத்துள்ளோம் இதனை இங்கு வருகின்ற நோயாளிகள் மாத்திரமன்றி வைத்தியசாலைக்கு வருகின்ற பொது மக்கள் அனைவரும் பெறலாம் .

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இவ்வாறான உணவு வகைகளையும் உணவு பழக்கவழக்கங்களையும் தொடர்ச்சியாக செய்து  வருகின்றோம்.

இதன் அடுத்த கட்டமாக தான் இவ்வகையான உணவு பழக்க வழக்கங்கள் பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்குடன் இச்சிற்றுண்டி சாலையை அமைத்துள்ளதாக அவர் தனது கருத்தில்  குறிப்பிடடார்.

இந்நிகழ்வில் வைத்திய நிபுணர்கள் தாதியர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.