காட்டுத்தீயால்,கங்காரு நீச்சல் குளத்தை நாடியது


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது.
இந்த காட்டுத்தீயில் இதுவரை 2 தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வனவிலங்குகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோலா கரடிகள் தீயில் கருகி செத்ததாக அந்த நாட்டின் பாராளுமன்றம் சமீபத்தில் கூறியது.

இதற்கிடையே நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் முன்னெப்போதும் இல்லாதவகையில் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அங்கு வெயிலின் அளவு 42 டிகிரி செல்சியசாக பதிவானது.

இந்த நிலையில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னி அருகே உள்ள மெர்ரிவா நகரில் காட்டுத்தீ மற்றும் வெயிலின் காரணமாக கடும் வெப்பத்தை எதிர்கொண்ட கங்காரு ஒன்று நீண்ட தேடலுக்கு பிறகு ஒரு வீட்டுக்கு வெளியே இருந்த நீச்சல் குளத்தை கண்டது.

உடனடியாக அந்த கங்காரு நீச்சல் குளத்தில் இறங்கி உடலை நனைத்து தன்னை குளிர்வித்துக்கொண்டது. இந்த காட்சிகளை வீட்டில் இருந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.