இந்தியா;மண்ணிழந்த மக்களை மடிய வைத்துள்ளது


குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை இரவு நிறைவேறியது.
இந்நிலையில் இந்த மசோதா குறித்து இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது.
இதற்கு காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்த்தும், அதிமுக உறுப்பினர்கள் ஆதரவாகவும் பேசியிருந்தனர்.

’ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நன்றி`

"இந்த மசோதா நிறைவேறியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்," என பிரதமர் நரேந்திர மோதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை'

"மாநிலங்களவையில் இன்று பேசிய அமித் ஷா, இலங்கை தமிழர்கள் மீது எந்த பாரபட்சமும் காட்டவில்லை. இதுவரை 9 லட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
"இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 50 ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டுவரப்பட்டிருந்தால், இந்த அளவுக்கு சூழ்நிலை மோசமாக இருந்திருக்காது."
"காங்கிரஸ் ஆட்சியின்போது, பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு வந்த அதிகளவிலான இந்து, சீக்கிய மதங்களை சேர்ந்த அகதிகள் குறித்து அம்மாநில அரசாங்கம் அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியது. அதன் காரணமாக, இந்து, சீக்கிய மதத்தை சேர்ந்த13,000 பேர் மட்டுமே பலனடைந்தார்கள். ஆனால், நாங்கள் ஆறு மதங்களை சேர்ந்தவர்களை இந்த மசோதாவில் இணைத்தும், எங்களுக்கு பாராட்டு இல்லை. மாறாக, முஸ்லிம்களை மட்டும் ஏன் இணைக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்படுகிறது."
"வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய மதம் கடைபிக்கப்படும்போது, அங்கு முஸ்லிம்கள் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவு."
"இந்த மசோதாவில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஏன் இடமளிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நேரடியாக இந்தியாவுக்கு வருவதில்லை, அவர்கள் முதலில் வங்கதேசம் சென்றுவிட்டு, பின்பு அங்கிருந்துதான் இந்தியாவுக்கு வருகிறார்கள்."
"நேற்று வரை சிவசேனா இந்த மசோதாவை ஆதரித்தது. ஆனால், ஒரே இரவில் தனது நிலைப்பாட்டை மாற்றியதற்கான காரணத்தை அந்த கட்சி மகாராஷ்டிர மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்."
சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் ஆகியவை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. ஏன் பெண்களுக்கு உரிமை இல்லையா? சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகும் கூட காஷ்மீர் அமைதியான சூழலே நிலவுகிறது. அதே போன்று, இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவும் முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற வாதத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்." என்று பேசினார்.
முன்னதாக பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த மசோதா குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

`ஹிந்துத்துவா கொள்கைக்காக`

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப. சிதம்பரம் பேசுகையில், ''இந்த அரசு தனது ஹிந்துத்துவா கொள்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவே இந்த மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயல்கிறது. இந்த சட்டம் செயலிழந்து போகும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

ப.சிதம்பரம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிற அண்டை நாடுகள் எதன் அடிப்படையில் விலக்கப்பட்டது.
எதன் அடிப்படையில் இந்த ஆறு மதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன? அகமதியர்கள் மற்றும் ரோஹிஞ்சாக்களை எந்த அடிப்பையில் விலக்கினார்கள்?
கிறித்துவ மதத்தை சேர்த்துக் கொண்டு யூதம் மற்றும் முஸ்லிம் மதத்தை விலக்குவதற்கான காரணங்கள் என்ன?
இலங்கை தமிழர்களையும், பூட்டானின் கிறித்துவர்களையும் ஏன் இதில் சேர்க்கவில்லை? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

சிறுபான்மை மக்களுக்கு யார் பொறுப்பு?

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து பேசிய மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே. ரங்கராஜன், ''இது சட்டமாக்கப்பட்டால், சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? எனவே தான் எனது கட்சி இதை எதிர்க்கிறது. இந்த நாட்டை பாழாக்காதீர்கள், அரசமைப்பை பாழாக்காதீர்கள். அதுதான் எனது கோரிக்கை'' என்று கூறினார்.

மதச்சார்பின்மைக்கு பலத்த அடி

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது நமது நாட்டின் மதச்சார்பின்மைக்கு பெருத்த அடியாக இருக்கும் என திமுக எம்.பி திருச்சி சிவா பேசினார்.
அண்டை நாடுகளாக ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன?
பூட்டானில் கிறித்துவர்களும், இலங்கை தமிழர்களும் கூட ஒதுக்கப்படுகிறார்கள் அவர்களின் நிலை என்ன? என கேள்விகள் எழுப்பினார் திருச்சி சிவா.

`இந்தியாவிற்கு எதிரானவர்களா?`

"இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தேசியவாதிகள் என்றும், எதிர்ப்பவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்றும் பேச்சுக்கள் நிலவி வருகின்றன."என சிவசேனை கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

’வங்காளவிரிகுடாவில் தூக்கி எறியப்பட வேண்டும்’


வைகோ

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து மதிமுக பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ பேசுகையில், "இந்த அருவருக்கதக்க, ஜனநாயகமற்ற, நியாயமில்லாத, அரசமைப்புக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது மாநிலங்களவை வரலாற்றில் கருப்பு பக்கமாக அமையும்," என குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து வைகோ பேசினார். 
"இந்த அருவருத்தக்க, மோசமான, ஜனநாயகமற்ற, நியாயமில்லாத, மன்னிக்க முடியாத, அரசமைப்புக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது மாநிலங்களை குறிப்பின் கருப்பு அத்தியாயமாக இருக்கும்," என குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து வைகோ இன்று மாநிலங்களவையில் பேசினார்.
இந்த சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய வாதமாக உள்ளது மியான்மர் மற்றும் இலங்கையில் துன்புறுத்தலுக்கு ஆளான மக்கள் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை என்பதுதான்.
இது சமத்துவத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்; மதச்சார்பின்மை மீது நடத்தப்படும் தாக்குதல்; ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்.
அனைத்து நம்பிக்கையும் கொண்ட மக்களும் சம்மாக நடத்தப்பட்ட வேண்டும் என்றுதான் இந்திய அரசமைப்பு சொல்கிறது.
இந்த சட்டத் திருத்த மசோதாவில் இலங்கை தமிழர்கள் வேண்டுமென்றே இந்திய அரசு விலக்கியுள்ளது என நான் குற்றம்சாட்டுகிறேன்.
இலங்கை அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலையால் தப்பிவந்து தமிழர்கள் தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் இனப்படுகொலையை செய்தவர்களுடன் இந்திய அரசு கைக்குலுக்குவது தமிழர்களின் நெஞ்சில் விஷம் தடவிய கத்தியை வைத்து குத்துவதற்கு சமம்
இந்த சட்ட மசோதா வங்காள விரிகுடாவில் தூக்கி எறியப்பட வேண்டும் என்று வைகோ பேசினார்.

அதிமுக ஆதரவு

இந்த மசோதாவிற்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாக அதிமுகவின் விஜிலா சத்யானந்த் தெரிவித்தார்.
அதிமுகவை சேர்ந்த எஸ் ஆர் பாலசுப்ரமணியம், எங்களுக்கு இதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன, இருப்பினும் இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம் என தெரிவித்தார்.