மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி




(க.கிஷாந்தன்)

மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி (10.01.2020) பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன.

மஸ்கெலியா பஸ்தரிப்பிடத்துக்கு அருகாமையில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளன.

மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் ஆரம்பமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிப்பதற்கு கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி தலவாக்கலை, டெவோனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதன்படியே ஜனவரி 10 ஆம் திகதி மலையக தியாகிகள் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது என்று மலையக உரிமைக்குரல் அமைப்பு தெரிவித்தது.

அத்துடன், நிகழ்வின் 2ஆம் அம்சமாக அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். சரவணனால் எழுதப்பட்ட மலையக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான 'கள்ளத்தோணி' நூல் வெளியிடப்படும்.

அதன்பின்னர் மலையகத் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு உயிர்கொடுத்துவரும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

அதேவேளை, காளிதாசன் குழுவினரின் வீதி நாடகம், மலையக தியாகிகள் தொடர்பான விசேட உரை ஆகியனவும் இடம்பெறவுள்ளன.

மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்தே நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன. நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைத்து மலையகத் தமிழர்களுக்கும் இவ்விரு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன