உக்ரைன் விமானம் இரானில் நொறுங்கி விழுந்தது


உக்ரைன் போயிங்-737 விமானம் ஒன்று இரானில் நொறுங்கி விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் 180 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று இரான் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் சர்வதேச விமான சேவையை சேர்ந்த இந்த விமானம், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் காமெனி விமானநிலையத்தில் இருந்து கிளம்பி சென்ற உடனே இந்த விபத்து நடந்துள்ளதாக ஃபார்ஸ் அரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகரான கீவ்-விற்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பெரிதாகியுள்ள இரான் - அமெரிக்கா இடையேயான மோதலுக்கு இந்த விபத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெளிவாக தெரியவில்லை.
விமானம் நொறுங்கி விழுந்த இடத்திற்கு மீட்புப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன. 
''விமானம் எரிந்துகொண்டிருக்கிறது. நாங்கள் எங்கள் மீட்பு குழுவினரை அனுப்பியிருக்கிறோம். எங்கள் குழு   சில பயணிகளின் உயிரை காப்பாற்றக்கூடும்''  என இரான் அவசரகால சேவைப்  பிரிவு தலைவர் ஃபிர்ஹொசைன் கொலிவாண்ட் கூறியுள்ளதாக, இரான் அரசு தொலைகாட்சி தெரிவித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. 
பிற செய்திகள்: