பொன்னியின் செல்வன்: வைரமுத்து இல்லையா? யார் யார் பணியாற்றுகிறார்கள்?


இயக்குநர் 'மணிரத்தினம்' இயக்கத்தில் உருவாக உள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது.
எழுத்தாளர் கல்கியால் எழுதப்பட்ட மிகவும் புகழ்பெற்ற, 'பொன்னியின் செல்வன்' வரலாற்று நாவலை திரைப்படமாக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் மணிரத்தினம் அறிவித்திருந்தார்.
இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், ரஹ்மான், அஷ்வின் உட்பட பலர் நடிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

கார்த்தி ட்விட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைTWITTER/ KARTHI

நடிகர்கள் கார்த்தி, திரிஷா, ரஹ்மான், அஷ்வின் ஆகியோர் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் அவர்களின் பங்கு இருப்பது குறித்த பதிவுகளை பதிவிட்டுள்ளார்கள்.
அதன் மூலம் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவர்கள் நடிப்பது உறுதியாகி உள்ளது.

திரிஷா ட்விட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைTWITTER/TRISHA

லைக்கா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸூடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.
தமிழில் 'கத்தி' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான லைக்கா புரொடக்‌ஷன்ஸ் 'சுபாஷ்கரன்' இந்தப் படத்தை தயாரிக்கிறார். 'தர்பார்', ' இந்தியன்2' ஆகிய திரைப்படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் டைட்டில் லுக்படத்தின் காப்புரிமைTWITTER/LYCA PRODUCTION

பணியாற்றுபவர்கள் யார்?

'நாயகன்' , 'தளபதி' போன்ற படங்களுக்கு கலை இயக்குநராக இருந்த தோட்டா தரணி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தப் படத்தின் மூலம் கலை இயக்குநர் ஆகியிருக்கிறார்.
'தசாவதாரம்' , 'காற்று வெளியிடை' போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழில் 'பிகில்'படத்திற்கு பின்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ள மிகப்பெரிய படம் இது.

ஏஆர் ரஹ்மான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'தரமணி', 'யாத்ரா' , 'சாஹோ' போன்ற படங்களின் படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் தான் இந்தப் படத்துக்கும் படத்தொகுப்பு செய்கிறார். 'தர்பார்', 'இந்தியன் 2' படங்களின் படத்தொகுப்பாளரும் இவரே.
'பத்மாவதி' , 'தங்கல்' , 'தூம் 3' போன்ற படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றிய ஷாம் கெளசல் இப்படத்திற்கும் சண்டைப் பயிற்சி அமைக்க உள்ளார்.
'ஓகே கண்மணி' , 'காற்று வெளியிடை' படங்களைத் தொடர்ந்து ஆடை வடிவமைப்பாளர் ஏகா லஹானி மணிரத்தினத்தின் இந்தப் படத்திற்கும் ஆடை வடிவமைப்பாளராகி இருக்கிறார்.
வரலாற்று கதையை மையப்படுத்திய திரைப்படமான இதில் ஒப்பனை வடிவமைப்பாளராக விக்ரம் கெய்க்வாட் உள்ளார்.
'காலா', 'மெர்சல்', 'தர்பார்' படங்களைத் தொடர்ந்து நடன இயக்குநர் பிருந்தா பொன்னியின் செல்வன் படத்திற்கும் நடன இயக்குநராக உள்ளார்.
'செக்க சிவந்த வானம்' படத்தில் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராகவும், கோ ரைட்டராகவும் இருந்த இயக்குநர் சிவா ஆனந்த் இந்தப் படத்திற்கும் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராக இருக்கிறார்.
'சர்கார்', 'எந்திரன் 2.0' படங்களைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கும் வசனங்கள் எழுதியுள்ளார். 'இந்தியன் 2' படத்திற்கும் இவர் வசனங்கள் எழுதி இருப்பது கூடுதல் செய்தி.

வைரமுத்து நீக்கப்பட்டாரா?

வைரமுத்து ஒரு பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்திற்கான பாடல்களை எழுத இருப்பதாக அறிவித்திருந்தார். அதனைப் பார்த்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இவர் எப்படி பொன்னியின் செல்வன் போன்ற காவியப் படைப்புகளில் பணியாற்றலாம் என்பது போன்ற கேள்விகளை முன்வைத்தனர்.
தன் மீது பின்னணி பாடகி சின்மயி கூறியிருந்த #MeToo பாலியல் புகாரை அந்த சமயத்திலேயே வைரமுத்து மறுத்திருந்தார்.

வைரமுத்துபடத்தின் காப்புரிமைFACEBOOK

சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர், இந்தப் படத்தில் இருந்து வைரமுத்து நீக்கப்பட்டதாக அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டைட்டில் லுக் போஸ்டரில் கவிஞர் வைரமுத்துவின் பெயர் உள்பட இப்படத்தில் பணியாற்றும் யார் பெயரும் இடம்பெறவில்லை இடம் பெறவில்லை.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் பெயர்கள் மட்டுமே அதில் இடம்பெற்றுள்ளன
இதனால் அவர் இந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு தரப்பிலிருந்து வைரமுத்து நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்தினத்துடன் இணைந்து பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள குமரவேலும் எழுதுகிறார்.