இனி என்ன நடக்கும்,அமெரிக்கா - இரான் இடையே?

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டது, அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. இதன் விளைவுகள் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும்.
இந்த பிரச்சனையில் இரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடக்கும் தாக்குதலும் அதற்கு நடத்தப்படும் எதிர்தாக்குதலும் இரு நாடுகளுக்கு இடையில் வெளிப்படையான மோதலை ஏற்படுத்தும்.
இதனால் இராக் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவும் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையாள உத்தி என்று ஒன்று இருந்தால், அந்த உத்தி இதுவரை இல்லாத அளவுக்கு சோதனைக்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியின்போது மத்திய கிழக்கு மற்றும் பெர்சிய வளைகுடா பகுதிகளுக்கான வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரான ஃபிலிப் கார்டன், இந்த கொலை, இரானுக்கு எதிராக அமெரிக்காவால் விடுக்கப்பட்ட போருக்கான அழைப்பு என கூறியுள்ளார்.
காசெம் சுலேமானீபடத்தின் காப்புரிமைAFP
Image captionகாசெம் சுலேமானீ
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு (குட்ஸ் படை ) என்பது இரானிய ராணுவப்படையில் வெளிநாட்டு நடவடிக்கைகளை கையாளும் ஒரு பிரிவு.
லெபனான், இராக், சிரியா மற்றும் பிற நாடுகளில் தாக்குதலுக்கு திட்டமிடுதல் மூலமாகவும் இரானியப் படைகளின் சிறு பிரிவுகளை ஆதரிப்பது மூலமாகவும் இரானிய ராணுவப் படையை வலுவாக்குவதிலும் விரிவுபடுத்துவதிலும் முக்கிய பங்காற்றியவர் காசெம் சுலேமானீ.
அமெரிக்காவை பொறுத்தவரையில், 62 வயதான காசெம் சுலேமானீ பல அமெரிக்கர்களைக் கொன்றவர். ஆனால் அவர் இரானில் மிகவும் பிரபலமானவர். இரான் நாட்டின் மீது அமெரிக்கா கொடுத்த அழுத்தம் மற்றும் பொருளாதாரத் தடை ஆகியவைக்கு இரான் எடுத்த பதில் நடவடிக்கைகளில் முக்கியமான பங்காற்றியவர் ஆவார்.
அதிபர் டிரம்பின் கவனம் சுலேமானீ மீது இருந்ததைவிட, அமெரிக்கா இப்போது அவர் மேல் ஏன் தாக்குதல் நடத்தியது என்பதே ஆச்சரியத்தை அளிக்கிறது.
இராக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட சிறு தாக்குதல்களுக்கு இரான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இரானின் நடவடிக்கையான, வளைகுடா பகுதியில் டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அமெரிக்க வான்வழி விமானங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சௌதி எண்ணெய் கிடங்கின் மீது நடத்தப்பட்ட முக்கிய தாக்குதல் என எதற்கும் அமெரிக்கா நேரடியாக பதிலளிக்கவில்லை.
ஆனால் இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக இரானிய ஆதரவு படைகள் என நம்பப்படும் படைகள் மீது ஏற்கனவே அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது.
சுலேமானீ கொல்லப்பட்டதற்கு, அவருடைய கடந்த கால நடவடிக்கைகளை மட்டும் அமெரிக்கா காரணமாக கூறவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இராக்கிலுள்ள அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகளில் இருப்பவர்கள் மீது தாக்குதல் நடக்கயிருந்ததை நிறுத்தும் நோக்கம் என விளக்கியிருந்தது.
அமெரிக்கா - இரான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அடுத்து என்ன என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கும். இந்த ஒரு நடவடிக்கையில் இரானை அச்சுறுத்தியதாகவும், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியா போன்ற தங்கள் கூட்டு நாடுகளுக்கு அமெரிக்காவின் ராணுவ வலிமையைக் காட்டியதாகவும் டிரம்ப் நம்புவார். ஆனால் சிறிது கால தாமதம் ஆனாலும் இரான் இதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்காது.
இராக்கில் உள்ள 5000 அமெரிக்க படை வீரர்களே இரானின் குறியாக இருக்கும். அல்லது இரான் மற்றும் அதன் கூட்டாளிகள் இராக்கில் இதற்கு முன்பு இலக்கு வைத்த நிலைகள் மீது மீண்டும் தாக்குதல் நடக்கவும் வாய்ப்புண்டு. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். இதன் முதல் தாக்கமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்.
அதே நேரம் அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும். அமெரிக்கா ஏற்கனவே பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்புக்காக தன்னுடைய சிறு படைகளை அனுப்பிவிட்டது. வேறு எங்கு பாதுகாப்பு தேவை என நினைக்கிறதோ அங்கு மேலும் சில படை வீரர்களை அனுப்ப அமெரிக்காவிடம் திட்டம் தயாராக இருக்கும்.
ஆனால் இரானின் பதிலடி தாக்குதலாக மட்டுமில்லாமல், சுலேமானீ நிறுவி, நிதி உதவி செய்த சிறிய அளவிலான குழுக்களின் உதவி மூலம் அப்பிராந்தியத்தில் மேற்கொள்ளும் வேறு நடவடிக்கைகளாகவும் இருக்கலாம்.
அமெரிக்க ராணுவப்படைபடத்தின் காப்புரிமைREUTERS
உதாரணமாக பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை சுற்றி வளைக்கலாம், அமெரிக்க ராணுவத்தின் படைகளை இராக்கில் நிறுத்தி வைப்பது குறித்து கேள்வி எழுப்பி இராக் அரசை பலவீனப்படுத்தலாம். போராட்டங்களை தூண்டிவிட்டு தாக்குதலிலிருந்து திசை திருப்ப முயற்சி செய்யலாம்.
காசெம் சுலெமானீக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அமெரிக்க ராணுவத்தின் திறனுக்கு ஒரு வெளிப்படையான சான்று. அந்த பகுதியில் இருக்கும் நிறைய பேர் அவருக்காக வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் இது அமெரிக்க அதிபர் டிரம்பின் புத்திசாலித்தனமாக கருதப்படுமா?
இதற்கு பிறகு பென்டகன் எவ்வளவு தயாராக இருக்கிறது? மத்திய கிழக்கு பகுதியைப் பற்றி டிரம்ப் என்ன நினைக்கிறார் என்பதை இது காட்டுகிறதா? இரானிய நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் சகிப்புதன்மையற்ற நிலையா இது? அல்லது மிகவும் மோசமானவர் என அதிபர் டிரம்பால் வர்ணிக்கப்பட்ட ஓர் இரானிய ராணுவத் தளபதிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையா?
இவற்றுக்கான பதில்கள் இனிமேல்தான் தெரியும்.


Advertisement