நாடாளுமன்ற தெரிவுக்குழு.... உறுப்பினர்களின் பெயர்களைக் கோருவதற்கு தீர்மானம்


நாடாளுமன்ற தெரிவுக்குழு....
உறுப்பினர்களின் பெயர்களைக் கோருவதற்கு தீர்மானம்
நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான உறுப்பினர்களின் பெயர்களைக் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை மறுதினம் பிற்பகல் 3 மணிக்கு முன்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவுக்கான தமது உறுப்பினர்களின் பெயர்களை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் 21ஆம் திகதிக்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் 114ஆம் நிலையியல் கட்டளைக்கு அமைய, புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும்.
அந்தத் தெரிவுக்குழுவின் ஊடாகவே ஏனைய குழுக்களுக்கான உறுப்பினர்களை பெயரிடுதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
அதேநேரம், எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை பிற்பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணிவரை நடத்துவதற்கும் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை முற்பகல் 10.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.