தனி வீடுகள்! தகவல்கள் அடங்கிய தொலைபேசி செயலி விரைவில்!




Krishanthan Gk


மலையக  பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள தனி வீட்டுத் திட்டமானது தரமாகவும், சிறப்பாகவும் அமைய வேண்டும் என்பதற்காக பல பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அத்துடன், கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் என்பதிலும் நாம் உறுதியாகவே இருக்கின்றோம்.

தற்போது விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்காக விரைவில் செயலியொன்று 'மொபைல் எப்' அறிமுகப்படுத்தப்படும். அதன் ஊடாகவும் அனைத்து தகவல்களையும் பெறலாம் என்பதுடன், எம்மிடம் முறைப்பாடுகளையும் முன்வைக்க முடியும் - என்று பெருந்தோட்ட மனித வள நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரையின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்கள் முழுமையாக வெற்றியளிப்பதற்கு தோட்ட முகாமையாளர்கள், நலன்புரி அதிகாரிகள், மக்கள் என அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பரத் அருள்சாமி கோரிக்கை விடுத்தார்.

மலையக  பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வெளியீடும் நிகழ்வு நுவரெலியாவில் பெருந்தோட்ட மனித வள நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

"மலையகத்துக்கான தனிவீட்டுத் திட்டமானது கடந்த காலத்தில் தொழிற்சங்க ரீதியில் முன்னுரிமை அளிக்கப்பட்டே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வீடுகள் தரமாக கட்டப்படவில்லை என்பது ஆய்வுமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களிடமிருந்து முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

52 நாட்கள் ஆட்சியின்போது எனது தந்தை அமரர். அருள்சாமி  பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக செயற்பட்டபோது,தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய, இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து வீட்டுத்திட்டம் கண்காணிக்கப்பட்டது.

பொகவந்தலாவை முதல் அட்டன் வரையான பகுதியில் சில அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், வீடுகள் தரமாக இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

எனவேதான், எம்மால் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீடுகளும் தரமானதாக இருக்கவேண்டும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எமக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். இதன்பிரகாரம் நாமும் உரிய நடைமுறைகளை பின்பற்றுவதற்கு விசேட ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

மலையக எழுச்சி வேலைத்திட்டத்தின்கீழ் 25 ஆயிரம் வீடுகள் கட்டப்படவுள்ளன. முதற்கட்டமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தோட்டத்தில் வேலைசெய்தாலும், செய்யாவிட்டாலும் அங்கு வாழும் அனைவரும் , தோட்டங்களுக்கு வரும் எமது நடமாடும் அதிகாரிகளிடம் அனைத்து தகவல்களையும் வழங்கமுடியும். இந்திய வம்வாவளி மக்கள் அனைவருக்கும் வீடுகள் கிடைக்கவேண்டும் என்பதில் நாம் குறியாகவே இருக்கின்றோம்.

அதேவேளை, கடந்தகாலத்தில் வழங்கப்பட்ட காணி பத்திரம்கூட சட்டபூர்வமானதாக இல்லை. எனவே, எமது மக்களுக்கு சட்டபூர்வமான காணி உறுதிப்பத்திரத்தை வழங்குவதற்கான விண்ணப்பமும் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அடுத்தவாரமளவில் 40 பேருக்கு உறுதிப்பத்திரங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

விரைவில் மொபைல் எப் (செயலி) ஒன்று எமது நிதியத்தால் அறிமுகப்படுத்தப்படும். அதில் மேற்படி விடயங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும், விண்ணப்பங்களும் இருக்கும்.

அதேபோல் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள மருத்து நிலையங்களில் மருந்து இல்லை என்றாலோ, சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் குறைபாடுகள் இருந்தாலோ எமக்கு உடன் அந்த செயலி ஊடாக அறிவிக்கமுடியும். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

சுகாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதே எனது பிரதான இலக்காக இருக்கின்றது. சொல்லில் அல்லாமல் அதனை செயலில் காட்டுவதற்கே முயற்சிக்கின்றேன். எனவே, உங்கள் அனைவரின் ஒத்துழைப்புகளும் தேவை." - என்றார்.