அமைதியாக இருங்கள் என்கிறார் நரேந்திர மோதி; அமித்ஷா பதவி விலக கோருகிறார் சோனியா


இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய வன்முறையில் 22 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் கடைபிடிக்கும்படி வேண்டுகோள் விடுத்து பிரதமர் நரேந்திரமோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோதி விடுத்த செய்தி

காத்திருக்கும் மோதி.படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionநரேந்திர மோதி.
அமைதியும், நல்லிணக்கமும் நமது விழுமியங்களின் மையப் பகுதி. எனது டெல்லி சகோதரிகளும், சகோதரர்களும், எல்லா நேரத்திலும் அமைதி, சகோதரத்துவத்தை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நிசப்தமும், சகஜ நிலையும் மிக விரைவாக திரும்புவது முக்கியமானது.
முன்னதாக, அவர் வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில்,
"டெல்லியின் பல பகுதிகளில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்தேன். அமைதி மற்றும் சகஜநிலையை உறுதி செய்ய போலீசும் மற்ற முகமைகளும் களத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

சோனியா வேண்டுகோள்

மத்திய அரசு, குறிப்பாக உள்துறை அமைச்சர்தான் டெல்லியின் தற்போதைய நிலைக்குப் பொறுப்பு. இதற்குப் பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று சோனியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறுகிறது காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவு.

டெல்லி வன்முறை குறித்த இன்றைய செய்திகளைப் படிக்க:

டெல்லி நிலவரத்தை விவாதிப்பதற்காக, கூட்டப்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியின் அவசரக் கூட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில், தேசத்தின் சார்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டி கேட்கும் கேள்வி என்று கூறி இரண்டு கேள்விகள் விடுக்கப்பட்டிருந்தன.
அதில் "கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாட்டின் உள்துறை அமைச்சர் எங்கே? அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் டெல்லி முதல்வர் எங்கே? அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?" என்று சோனியா காந்தி கேள்வி எழுப்பியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.