(தகவல்: MCM Hanihf, RDO-Nintavur)
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ்
இயங்கும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையங்களில் 2019 ஆம் ஆண்டில் பயிற்சி பெற்று வெளியாகிய மாணவிகளின் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தவும் அதனூடாக சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தவும்,"சுயதொழில் முயற்சிக்காக பெண்களை வலுவூட்டல்" (Empowering women for Entrepreneurship) எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண மட்ட கண்காட்சியானது கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நா.தனஞ்சயன் அவர்களின் சிறப்பான வழிகாட்டலில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி வளாகத்தில் 2020 பெப்Uவரி 27,28,29ஆகிய திகதிகளில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இக்கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா, உள்ளூராட்சி, கிராம கைத்தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் U.L.A.அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களும்,
கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும்
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஷித வனிஹசிங்க அவர்களும், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் கலந்து சிறப்பித்த இந் நிகழ்வில் பல அரச அதிகாரிகளும், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மூன்று மாவட்டங்களின் மாவட்ட கிராம அபிவிருத்தித் உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தித் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தித் உத்தியோகத்தர்கள், தையல் போதனாசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் 42 நிலையங்களில் பயிற்சி பெற்ற சுமார் 1200 மாணவர்களின் பல தரப்பட்ட கைவினை மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாணவிகள் தமது சொந்த தயாரிப்பு பொருட்களை நிகழ்நிலை சந்தை (Online Marketing) வாயிலாக விற்பனை செய்ய rural products.lk எனும் இணையத்தளம் ஆரம்பவிழாவின் போது ஆளுனரால் திறந்து வைக்கப்பட்டது.
இக்கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நேற்று (2020.02.29) கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நா.தனஞ்சயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுற்றுலா, உள்ளூராட்சி, கிராம கைத்தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் U.L.A.அஸீஸ் கலந்து சிறப்பித்தார். இதன் போது மாணவிகளின் 12 வகையான போட்டிப் பொருட்களுக்கு மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும், இப்பன்னிரெண்டு வகுதிகளுக்கும் மாகாண ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பணப்பரிசில்களும், மாகாண மட்டத்தில் மிகச்சிறந்த தையல் போதனாசிரியைகள் மூவருக்கு கேடயங்களும், இறுதியில் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் மூன்று மாவட்டங்களுக்கும் வெற்றி கேடயங்களும் வழங்கப்பட்டன. இதன் அடிப்படையில் முதலிடத்தை அம்பாறை மாவட்டமும், இரண்டாம் இடத்தை திருகோணமலை மாவட்டமும் மூன்றாமிடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் பெற்றுக்கொண்டன.





Post a Comment
Post a Comment