கோரிக்கை




(க.கிஷாந்தன்)

"நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட  ஆயிரம் ரூபா கூட இழுபறியிலேயே இருந்து வருகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்கவேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அட்டனில் இன்று (16.04.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

"பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என கொரோனா வருவதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா தாக்கத்தால் அதனை வழங்க முடியாமல் இருப்பதாக தற்போது அறிவிக்கப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட நிர்வாகங்களால் 3 அல்லது 4 நாட்களே வேலை வழங்கப்படுகின்றது. இதனால் குறைந்தளவு சம்பளமே கிடைக்கின்றது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு, அரசாங்கம் ஏதேனும் விதத்தில் மானிய அடிப்படையிலாவது உதவி வழங்கவேண்டும்.

அதேபோல் தோட்டப்பகுதிகளில் இருந்து கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களுக்கு தொழிலுக்கு சென்றவர்கள், தொடர் ஊரடங்கு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வருமானம் இல்லை. அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தார் இங்கு தவிக்கின்றனர். எனவே, இவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவேண்டும்.

அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளடக்கப்படவில்லை. அவர்களின் துன்பம் துடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

சமுர்த்தி கொடுப்பனவில் பாகுபாடு காட்டப்படுகின்றது. சில அதிகாரிகள் பக்கச்சார்பாக செயற்படுகின்றது. மாவட்ட அரச அதிபரிடம் முறையிட்டுள்ளோம். அநீதி இடம்பெறுவதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.ஆதாரங்களை கோரியுள்ளார். அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் மக்களின் உயிரை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.  தேர்தலை நடத்துவதற்கு அவசரப்படக்கூடாது.

குறிப்பாக தேர்தலொன்று நடத்தப்படவேண்டுமெனில் பிரசாரம்முன்னெடுப்பதற்கான சுதந்திரம் கட்சிகளுக்கு, வேட்பாளர்களுக்கு இருக்கவேண்டும். அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். ஆனால், அதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. மூன்று மாதங்களுக்காவது தேர்தலை பிற்போடப்படவேண்டும்." - என்றார்.