முடக்க நிலையை நீக்கும் திட்டத்தை அறிவித்தார் டிரம்ப்


கொரோனா வைரஸால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அமலிலுள்ள முடக்க நிலை படிப்படியாக நீக்கி பொருளாதாரத்தை மீள்கட்டமைப்பு செய்யும் திட்டத்தை அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான அமெரிக்காவில் இதுவரை ஆறரை லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32,186 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, அமெரிக்காவில் 2.2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்ததுடன், நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் அதன் உச்சநிலையை கடந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக கூறி வரும் டிரம்ப், இன்று (வெள்ளிக்கிழமை) ‘அமெரிக்காவை மீண்டும் திறத்தல்’ என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரத்தை முழு வீச்சில் இயங்க செய்யும் மூன்று கட்டங்கள் கொண்ட திட்டத்தை ஆளுநர்கள் உடனான கூட்டத்திற்கு பின்னர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம், தங்களில் மாகாணங்களில் நடைமுறையிலுள்ள முடக்க நிலையை ஆளுநர்கள் படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றும், இந்த பணியை மைய அரசின் உதவியுடன் அந்தந்த மாகாண ஆளுநர்களே நேரடியாக மேற்கொள்வார்கள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இதுமட்டுமின்றி, இந்த மாதத்தின் இறுதிக்குள்ளேயே சில மாகாணங்கள் முடக்க நிலையை நீக்கக்கூடும் என்ற டிரம்பின் கருத்தால், கடந்த சில நாட்களாக வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்த அமெரிக்க பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன.