மருதானையில், ஊரு சனம் தூங்கிருச்சு பாடலும், கொரொனா வைரசும்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக, மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
எனினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக சுகாதார அமைச்சின் இறுதித் தரவுகளின் பிரகாரம், ஐவர் உயிரிழந்துள்ள அதேவேளை, 159 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், கொரோனா தொற்றினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண திட்டங்களை வழங்கும் முயற்சிகளை அரசாங்கம் மாத்திரமன்றி தனியார் துறைகளும் முன்னெடுத்து வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகும் பகுதிகளை முழுமையாக முடக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி, கம்பஹா, யாழ்ப்பாணம், சிலாபம், புத்தளம், களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
கொழும்பு - மருதானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்திருந்தார்.
இவர் தனது வீட்டில் இருந்த நிலையில் சுகயீனமுற்றிருந்ததுடன், அவர் அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இது இலங்கையில் பதிவான நான்காவது மரணமாகும்.
அத்துடன், குறித்த நபரின் மருமகன் மற்றும் பேரன் ஆகியோருக்கும் இந்த தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார தரப்பினர் அறிவித்திருந்தனர்.
இந்த மரணத்தை அடுத்து, குறித்த நபர் வாழ்ந்த மருதானை தொடர்மாடி குடியிருப்பொன்று அமைந்த பகுதி முழுமையாக முடக்கப்பட்டது.
தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும், அந்த பகுதியிலுள்ள மக்கள் சுய கண்காணிப்புக்கு உட்படுத்தும் வகையிலுமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, குறித்த பகுதியிலுள்ள சுமார் 700ற்கும் அதிகமானோர் தமது வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர்.
படத்தின் காப்புரிமைTWITTER
அந்த பகுதியிலுள்ள மக்கள் வீட்டு முற்றத்திற்கு வருவதற்கும் பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்துள்ளனர்.
பாதுகாப்பு பிரிவினரின் இசை நிகழ்ச்சி
இதையடுத்து, அந்த பகுதியிலுள்ள மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டதை உணர்ந்த ராணுவத்தினர், அவர்களை மகிழ்விக்கும் வகையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தொடர்மாடி குடியிருப்பு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக பாதுகாப்பு பிரிவின் வாகனத்தை நிறுத்தி, அதில் இசை நிகழ்ச்சியை பாதுகாப்பு பிரிவினர் நடத்திய சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
இந்த சம்பவம் குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் தெருவில் நின்று கொண்டு ஒரு குழுவினர் பாடிக்கொண்டிருப்பதை காண முடிகிறது. 'ஊரு சனம் தூங்கிருச்சு...' எனத்தொடங்கும் தமிழ் திரைப்படப் பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தது.
அந்த பகுதியிலுள்ள மக்களில் மனங்களில் எழுந்துள்ள அச்சத்தை போக்கும் வகையிலும் இந்த இசை நிகழ்ச்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மனதளவில் பாதிக்காதிருக்கும் நோக்குடன் இவ்வாறு புதிய முயற்சிகளை இலங்கை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement