அடுத்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது சிரமம்!


கோவிட்-19 என்ற கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி மருந்து தயாராகாது விட்டால் அடுத்த ஆண்டு 2021 இலும் டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது சிரமம் என ஜப்பானிய மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
வழமையாக 4 ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு லீப் வருடத்திலும் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மத்தியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறத் திட்டமிடப் பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் உலகளாவிய கொரோனா பெரும் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அடுத்த வருடம் 2021 இல் நடத்துவது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியாலும், ஜப்பான் அரசாலும் ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டது.
இந்நிலையில் ஜப்பான் போட்டிகளை ஏற்று நடத்தலாமா அல்லது கூடாதா என்பது தொடர்பில் தான் கருத்துரைக்க வரவில்லை என்று தெரிவித்த அந்நாட்டு மருத்துவக் குழுவைச் சேர்ந்த டாக்டர் யோஷிடக்கே யோக்கோகுரா, கொரோனாவுக்குத் தடுப்பு மருந்தில்லாமல் போட்டிகளை நடத்துவது மிகவும் சவாலான சிரமாமான விடயம் என்பதையே தான் வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார். ஏற்கனவே ஜப்பானில் கொரோனா தொற்றுக்கான சோதனைகள் போதுமான அளவு நடைபெறவில்லை என்றும் அங்கு பாதுகாப்பு அங்கிகளுக்கு இன்னும் பற்றாக்குறை நிலவுவதாகவும் டாக்டர் சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் மருத்துவமனைகளில் கொரோனா கிருமி பரவுவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஜப்பான் அரசு இதுவரை 13 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள மருத்துவ குழுக்களில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மருத்துவத் துறை நிபுணர்களுடன் இணைந்து இப்பணியில் முன்னணியில் உள்ளது.
தமது பரிசோதனை முன்னேற்றகரமாக சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்த இந்த அமைப்பின் தலைவர் ஆதார் பூனவல்லா மே இறுதிக்குள் உற்பத்தியைத் தொடங்குவதற்கும் செப்டம்பர் அல்லது ஆக்டோபரில் பாவனைக்கு வந்து விடக் கூடியதுமான ஒரு தயாரிப்புத் தம்மிடம் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஆக்ஸ்போர்டு அணி இணைந்து செயற்பட்ட முந்தைய தருணத்தில் எபோலா வைரஸுக்குத் தடுப்பூசி கொண்டு வருவதில் வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கோவிட்-19 இற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் அமெரிக்காவின் கோடஜெனிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயலாற்றி வருகின்றன.