"ஹிரு” உட்பட 5 இணையங்கள் மீது தாக்குதல்

இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனமான ஹிரு நிறுவனத்தின் செய்தி இணையத்தளம் சைபர் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பானவர்களே இந்த சைபர் தாக்குதலை நடத்தியதாக அந்த நிறுவனத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளின் இவ்வாறான சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

கடந்த ஆண்டும் இதேபோன்று சுமார் 10 இணையத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முறை குறித்த சைபர் தாக்குதலை தடுத்து நிறுத்த தாம் பல்வேறு வகையிலான நடைமுறைகளைப் பின்பற்றியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மே மாதம் 18ஆம் தேதி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்படுவதற்கான பிரதான காரணம், ஒரு குழுவின் பிரபல்யத்தை உறுதிப்படுத்துவதற்கு எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை: தமிழீழம் சைபர் படையணி சைபர் தாக்குதல்

அதனால், குறித்த நபர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடாதிருப்பதே சிறந்தது என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த ஆண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என தாம் முன்னதாகவே எதிர்பார்த்திருந்ததாக கூறிய அவர், அதனை தடுத்து நிறுத்த பல முன் ஆயத்தங்களை மேற்கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை கணினி அவசர தயார் குழு, இலங்கை விமானப்படையின் சைபர் பிரிவு மற்றும் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து ஏற்கனவே ஒழு குழுவொன்று தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாக தீனதயாளன் கூறுகின்றார்.

தொடர்ந்தும் குறித்த குழு, இலங்கையிலுள்ள அனைத்து இணையத்தளங்களையும் கண்காணித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இணையத்தளங்களை எவ்வாறு பாதுகாப்பது?

இலங்கை: தமிழீழம் சைபர் படையணி சைபர் தாக்குதல்

இணையத்தளங்களிலுள்ள சில குறைபாடுகளினாலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளன் நாகரத்னம் தெரிவிக்கின்றார்.

புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களிலேயே, இணையத்தளங்களை புதுப்பித்து வருவோமேயானால் இவ்வாறான சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், தாம் தொடர்ந்தும் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தீனதயாளம் நாகரத்னம் கூறுகின்றார்.Advertisement