சாமிமலை பகுதியில் வெள்ள நீர்

(க.கிஷாந்தன்)

 

மலையகத்தில் பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் பகுதியளவும் சில வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

 

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஆங்காங்கே சிறு அளவிலான மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் தடைகளுக்கு மத்தியிலேயே வாகன போக்குவரத்து இடம்பெறுகின்றது. கடும் பனிமூட்டம் நிலவுவதால் அவதானமாக வாகனம் செலுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

 

அடை மழையால் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் மஸ்கெலியா சாமிமலை, ஓல்டன் கீழ்பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளுக்கு வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட ஆலயமும் நீரில் மூழ்கியுள்ளது.

 

அதேபோல சாமிமலை பாக்ரோ தோட்டப்பகுதியில் வெள்ளத்தால் 12 குடும்பங்களும், கொட்டகலை சார்மஸ் தோட்டத்தில் 23 குடும்பங்களும் தலவாக்கலை ஸ்டார்லின் பகுதியில் 25 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், உறவினர்களின் வீடுகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேவையான உதவிகளை அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

 

அதேவேளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவு விவசாயம் செய்யப்படுகின்றது. தொடர் மழையால் விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தோட்டங்களுக்கு வெள்ளநீர் புகுந்துள்ளதால் உற்பத்திகள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 Advertisement