பிரமோற்சவ பெருவிழா


வி.சுகிர்தகுமார் 

  அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஆனிப்பௌர்ணமி பிரமோற்;சவ  பெருவிழாவின் தீர்த்தோற்சவம் 04ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமான பிரமோற்சவ கிரியைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்று வருகின்றன.

சிவபூமி என அழைக்கப்படும் இலங்கைத்திருநாட்டின் தென்கிழக்கில் அம்பாரை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புடன் நீர்வளமும்  நிலவளமும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் கருங்கொடியூர் என அழைக்கப்படும் அக்கரைப்பற்று.

ஆரம்ப காலத்தில் இப்பகுதியினை கருங்கொட்டி எனும் பற்றைக்காடுகள்  சூழ்ந்திருந்ததாகவும்   அவற்றை அகற்றி மக்கள் குடியேறியமையால் கருங்கொடியூர் எனவும் கிழக்கே வங்கக்கடலும் ஏனைய மூன்று பக்கங்களில் தில்லையாறும் வளைந்தோடுவதால் தீவு எனவும் முழுதாக இப்பிரதேசம் கருங்கொடித்தீவு என அப்போது பெயர் பெற காரணமானது என வரலாறு கூறுகின்றது.
 
இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க  ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ;ஆலயத்தில்; கடந்த (24) இரவு  வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமான  ஆனிப்பௌர்ணமி பிரமோற்;சவ பெருவிழாவானது 25ஆம் திகதி இடம்பெற்ற கொடியேற்றத்துடனும், 30ஆம் திகதி இடம்பெற்ற மாம்பழத்திருவிழா 01ஆம் திகதி  இடம்பெறும் திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை  02ஆம் திகதி இடம்பெறும் வேட்டை திருவிழாவும், 03ஆம் திகதி இடம்பெறும்; சத 108 சங்காபிசேகமும் மாலை முத்துசப்பர திருவிழாவும், 04ஆம் திகதி தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும் 05ஆம் திகதி இடம்பெற்ற பூங்காவனத்திருவிழாவுடனும் 06 ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடனும்  நிறைவுறவுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பங்களிப்போடு திருவிழா இடம்பெற்றுவருவதுடன் இம்முறை தீர்த்தோற்சவம் ஆலய கிணற்றிலேயே இடம்பெறும்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலய பரிபாலன சபைத்தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற் கொடியேற்ற பெருவிழாவின் கிரியைகள் யாவற்றையும்  அக்கரைப்பற்று பகுதி ஆதினகுரு இலி பழனிவேல் குருக்கள் ஆசியுடன் கிரியாகிரம ஜோதி அலங்கார பூசனம் சிவாகமபானு அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ சு.சுதர்சன் குருக்கள் மற்றும் ஆலய குரு ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வருகின்றனர்.