எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளித்த உலகவரலாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்டது


  எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளித்த உலகவரலாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான லஞ்சமே என ஜக்கிய சுதந்திர முன்னணியின் வேட்பாளரும் முன்னை நாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ரணிலின் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்தவர் சம்மந்தன். நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்தும் அவர் கடந்த அரசாங்கத்தை காப்பாற்றினார். இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது இரண்டு கோடி. இதனை நான் சொல்லவில்லை. அவர்களுடன் இருந்த சிவசக்தி ஆனந்தன் எனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். கூறுகின்றார்.

இதேநேரம் 25 வயது இளைஞன் ஒருவன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு மூன்று முறை வாக்களித்தால் அவனது வாழ்க்கையே தொழில் எடுக்க முடியாமல் முடிந்துவிடும். இவ்வாறே பல இளைஞர்கள் யுவதிகளின் வாழ்க்கை முடிந்து விட்டது. ஆகவே இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும்.

எனவே எதிர்வரும் தேர்தலில் பெருந்தொகையான வாக்குகளை மக்கள் எமக்கு அளிக்க வேண்டும். வாக்கு சீட்டில் இரண்டவாது இடத்தில் உள்ளது கப்பல் சின்னம். ஆகவே அதற்கும் எனது இலக்கம் 9 மற்றும் விரும்புகின்ற வேட்பாளர் இருவருக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இதன் மூலம் வெற்றி பெற்று எம்முடன் நெருக்கமாகவுள்ள மகிந்த மற்றும் கோட்டபாய அரசாங்கத்தை சிறந்த முறையில் நாம் பயன்படுத்தி வளத்தை கொண்டு வந்து மக்களை அபிவிருத்தியடையச் செய்வோம் என்றார்.

இதேநேரம் கணிப்பின் படி கடந்த தபால்மூல வாக்களிப்பில் 80 வீதமான வாக்குகள் எமக்களிக்கப்பட்டுள்ளதுடன் கல்விச் சமூகம் நிறைந்த காரைதீவு மக்கள் கூட இன்று நூறு வீதமான ஆதரவை எமக்கு வழங்க தயாராகவுள்ளனர் என்றார்.

இங்கு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் ...1994 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் அம்பாரையில் போட்டியிட முடியுமென்றால் ஏன் அயல் மாவட்டத்தை சேர்ந்த கர்ணா அம்மான் இங்கு போட்டியிட முடியாது என்றார்.

நாம் இங்கு வாக்கு கேட்பது எமது சொந்த நலனுக்கான அல்ல. நமது எல்லைகளை பாதுகாக்கவும் தொழில் வாய்ப்பை வழங்கவும் கிராமங்களை அபிவிருத்தி செய்யவுமே என்றார்.


Advertisement