தொண்டைமானாறு இளைஞர், பிரான்ஸில் கொலை

பாரிஸ்- லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்.இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (43வயது) என்பவரே கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வீட்டு வாடகை தொடர்பில் வீட்டு உரிமையாளருடன் இவருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளரின் நண்பர்கள் சிலரால் இவர் தாக்கப்பட்டு, கடந்த புதன்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளார்.


இவ்வாறு காயங்களுடன் வீதியில் நின்ற அவரை, பொலிஸார் பொறுப்பேற்று,  வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் இவரது சடலம் வியாழக்கிழமை அவரது வீட்டில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாக வீட்டு உரிமையாளரால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவரது தலை,முகம், கழுத்துப் பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டுள்ளன.

அத்துடன் இவரது வீடு உரிமையாளரால் பூட்டப்பட்டிருந்த நிலையில் எவ்வாறு மீண்டும் வீட்டுக்குச் சென்றார் என்பது தெரியவில்லை என கூறப்படுகின்றது.

மேலும் இவரது நெருங்கிய உறவினர்கள் எவரும் பிரான்ஸில் இல்லை எனவும், இவரது மனைவி இலங்கையில் வசிப்பதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.Advertisement