இடைநிறுத்தம்


2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நான்காவது நாளாக இன்றும் (16) இடம்பெறவுள்ளது.

பாதுகாப்பு பிரிவின் ஊழியர்கள் இன்று மற்றும் நாளைய தினங்களில் தமது தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் தமது வாக்குகளை பதிவு செய்வதற்கான  சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஏழு இலட்சத்து ஐயாயிரத்து 85 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு, உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க கூறுகின்றார்.

சுகாதார மற்றும் ஏனைய தரப்புகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, குறித்த பகுதிகளில்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமையின் கீழ், சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றியே தபால் திணைக்களம் செயற்பட்டு வருவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவிக்கின்றார்.

இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கையொப்பமிடுவதற்காக பிரத்தியேகமாக பேனைகளை பயன்படுத்துமாறு தபால் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 19 மற்றும் 26 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.