இலங்கை #பூனை செய்தி


ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட பூனை, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து அப்பூனை தப்பிச் சென்றுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பூனை அது வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து தப்பித்துள்ளதாக, சிறைச்சாலை தகவலை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தினால் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ஹெரோயின் கொண்ட சிறிய பொதி ஒன்று, குறித்த பூனையின் கழுத்தில் சுற்றிக் கட்டப்பட்டிருந்தவாறு அப்பூனை நேற்று முன்தினம் (01) மீட்கப்பட்டிருந்தது.

குறித்த பூனையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த அப்பொதியினுள் சுமார் 02 கிராம் ஹெரோயின், 02 சிம் அட்டைகள், மெமரி அட்டை (memory chip) காணப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்கு ஹெரோயின் கடத்துவதற்காக குறித்த பூனை பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

இதேவேளை குறித்த செய்தியை மேற்கோள் காட்டி AFP உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.