என்ன நடக்கின்றது, இந்தியப் பெண்களுக்கு?


 


உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்பட்ட 19 வயது பெண் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த விவகாரத்தை அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னெள கிளை, தாமாக முன்வந்து வியாக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அந்த பெண்ணின் உயிரிழப்பு விவகாரத்திலும் விசாரணை நடவடிக்கையிலும் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில உள்துறை செயலாளர், காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர், ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


முன்னதாக, ஹாத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளியில் புல்வெட்ட தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் சென்ற பெண், நான்கு நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பெண் அலிகார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவரது நிலைமை மோசமடைந்து விட்டதாகக் கூறி டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் செப்டம்பர் 28ஆம் தேதி அவர் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், செப்டம்பர் 29ஆம் தேதி அவரது உயிர் பிரிந்தது. இரு வார போராட்டத்துக்கு பிறகு உயிரிழந்த அந்த பெண்ணின் முதுகெலும்பு உடைந்தும், நாக்கு அறுக்கப்பட்ட நிலையிலும் இருந்ததாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.


தொடக்கத்தில் இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாத காவல்துறை இதை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து ஒரு நபரை மட்டும் ஹாத்ரஸ் காவல்துறையினர் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் மேலும் மூன்று பேர் வழக்கில் சேர்க்கப்பட்டு நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் விரிவாக ஒளிபரப்பாகின.


ஹாத்ரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லியில் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவத்துடன் ஹாத்ரஸ் சம்பவத்தை ஒப்பிட்டு செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன.


இந்த நிலையில், ஹாத்ரஸ் பெண் உயிரிழந்த மறுநாள் அதிகாலை 3 மணியளவில் அவரது உடலை மருத்தவமனையில் இரந்து அவசரமாக வெளியே கொண்டு வந்த காவல்துறையினர், அவரது உடலை தகனம் செய்ய அவரது குடும்பத்தினரை கட்டாயப்படுத்தியதாக புதிய சர்ச்சை எழுந்தது. மண்ணெண்ணெய் ஊற்றி அந்த பெண்ணின் சடலத்துக்கு தீ மூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த விவகாரத்தில் காவல்துறையினர் திடீரென்று அவசரம் காட்டுவது ஏன் என்று பெண்ணுரிமை செயல்பாட்டாளர்களும் அரசியல் கட்சியினரும் போர்க்கொடி உயர்த்தினார்கள்.


இந்த நிலையில், உத்தர பிரதேச மாநில காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் பிரசாந்த் குமார், தடயவியல் பரிசோதனையில் ஹாத்ரஸ் பெண் பாலியல் வல்லுறவால் உயிரிழக்கவில்லை என தெரியவந்துள்ளதாக கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், ஜாதி ரீதியில் இந்த விவகாரத்தை சிலர் திரித்துக்கூறியுள்ளதாகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

மேலும் ஊடகங்களில் வெளிவருவது போல, ஹாத்ரஸ் பெண் கூட்டுப்பாலியலுக்கு ஆளாகவில்லை என்றும் அவரது முதுகெலும்பு உடையவோ, நாக்கு அறுபடவோ இல்லை என்று மாவட்ட கண்காணிப்பாளர் புதிய விளக்கம் கொடுத்தார். இதையடுத்து. அந்த பெண்ணின் மருத்துவ அறிக்கை தொடர்பான விவரத்தை ஏன் அவரது பெற்றோரிடம் பகிரவில்லை என அவரிடம் கேட்டபோது, "அது மிகவும் ரகசியமான ஆவணம். தடயவியல் சோதனை நடந்து வருகிறது. அதனால், எல்லா ஆதாரங்களையும் சேகரித்து வருகிறோம். ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல உயிரிழந்த பெண் அத்தகைய கொடுமையை அனுபவிக்கவில்லை" என்று கூறினார்.


மேலும் அவர், அந்த பெண்ணின் நாக்கு அறுபடவில்லை, முதுகெலும்பு உடையவில்லை. அவரது கழுத்தின் குரல்வளை முறிந்துள்ளது. அது அவரது நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளது. அதுவே மரணத்துக்கு காரணம் என்று கூறினார்.


ராகுல், பிரியங்கா விடுவிப்பு: ஹாத்ரஸ் பெண்ணின் குடும்பத்தை எச்சரித்தாரா ஆட்சியர் - என்ன நடந்தது?

உத்தர பிரசேதத்தில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட மேலும் ஒரு தலித் பெண் உயிரிழப்பு

ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வல்லுறவு: உ.பி அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பிறகு அவசர, அவசரமாக அந்த பெண் உயிரிழந்த மறுதினமே அதிகாலையில் ஏன் அவரது உடலை தகனம் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்தது என்று கேட்டபோது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அவ்வாறு செய்ததாக அவர் பதில் அளித்தார்.


இந்த நிலையில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, தங்களின் மகள் அளித்த வாக்குமூலத்திலேயே தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக தெரிவித்தார் என்று அவரது பெற்றோர் குறிப்பிட்டனர். இந்த விவகாரத்தில் காவல்துறையினரும், மாவட்ட ஆட்சியரும் தங்களை யாரிடமும் பேசக்கூடாது என்று மிரட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இவை தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் விரிவாக வெளியான நிலையில், பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் மரண வாக்குமூலமே அவர் அந்த கொடுமையை அனுபவித்ததற்கான சாட்சி என்று இந்திய செய்தித் தொலைக்காட்சியான என்டிடிவியில் பேசிய பல்வேறு சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.


மேலும், அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் விந்தணு மாதிரி படிந்திருக்கவில்லை என்பதை மட்டும் வைத்து அவர் அந்த கொடுமைக்கு ஆளாகவில்லை என்ற முடிவுக்கு வர முடியாது என்றும், பாலியல் வன்கொடுமைக்கு அவரை ஆட்படுத்திய நபர்கள் ஆணுறைகளை பயன்படுத்தியிருக்கலாம் அல்லது வேறு வகையிலான கொடுமைகளை அவருக்கு இழைத்திருக்கலாம். இது தொடர்பாக இரு வேறு மருத்துவமனைகள், அவர் தொடக்கத்தில் சேர்க்கப்பட்ட உள்ளூர் மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவ அறிக்கைகளை காவல்துறை மறுப்பதில் இருந்தே இந்த விவகாரத்தில் எதையோ மறைக்க அரசு முற்படுவதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்தன.


இந்தப் பின்னணியிலேயே இந்த விவகாரத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.


முன்னதாக, 2012இல் டெல்லி கூட்டுப்பாலியல் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பம் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானவர் வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா. அவர் ஹாத்ரஸ் மாவட்டத்துக்குச் செல்ல முற்பட்டபோது அவருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.


இது குறித்து பின்னர் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், உயிரிழந்த ஹாத்ரஸ் பெண்ணின் பெற்றோர் தங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், அவர்களை சந்திக்க என்னை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அனுமதி மறுத்துள்ளன என்று தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது.