.மியன்மாரில் மேலும் 6 போராட்டக்காரர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொலை


 


மியன்மாரில் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 06 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர்.


1988 ஆம் ஆண்டு மாணவரொருவர் கொலை செய்யப்பட்டதன் ஆண்டு நிறைவு இன்று அனுஷ்டிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவமும் இன்று பதிவாகியுள்ளது.


மியன்மாரின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மண்டலேயில் (Mandalay) போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.


இதன்போது மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.


இதேவேளை, வர்த்தகத் தலைநகராகிய யங்கூனில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடக​மொன்று செய்தி வௌியிட்டுள்ளது.


மற்றுமொருவர் பியய் நகரின் மத்திய பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.


துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்தவர்களை அம்பியுலன்ஸ்களில் ஏற்றுவதற்கு பாதுகாப்புத் தரப்பினர் தடை விதித்ததாகவும் பின்னர் சற்று தாமதித்து அதற்கு அனுமதி வழங்கியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மியன்மாரில் ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


இராணுவக் கிளர்ச்சிக்கு எதிராக வாரக்கணக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களின் போது பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டுத்தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.