இலங்கை நிருவாக சேவையின் விசேடதர சிரேஸ்ட அதிகாரி, ஓய்வு


 


சுகிர்தகுமார் 0777113659 


இலங்கை நிருவாக சேவையின் விசேடதர சிரேஸ்ட அதிகாரியும்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளரும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளருமான எஸ்.அருள்ராஜா 36 வருட அரச சேவையில் இருந்து இன்றுடன் (10 ஆம் திகதியுடன்) ஓய்வு பெறுகி;னறார்.
 

எல்லோருடனும் அன்பாகவும் எளிமையாகவும் நட்புறவுடன் உறவாடும் அரச சேவையின் உயர் அதிகாரியான இவர் 1961 இல் மட்டக்களப்பு மாங்காடு கிராமத்தில் பிறந்து மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்று உயர்கல்வியை செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.

இதேநேரம் மாங்காடு பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் நிருவாக சேவை அதிகாரியான இவர் பொது நிருவாக துறையில் பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமாவை இந்தியா காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.

1984ஆம் ஆண்டு ஆசிரியராக குருநாகல் மாவட்ட பாடசாலை ஒன்றில் ஆரம்பித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியராக இணைந்து 1991 ஆம் ஆண்டுவரை தொடர்ந்தார். இந்நிலையில் 1991ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்திபெற்று 20 வருடங்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் உள்ளிட்ட அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றினார். இதில் 09 வருடங்கள் ஆலையடிவேம்பில் கடமையாற்றியமையும் இக்காலத்தில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் பெற்றுக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2010 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு நியமனம் பெற்று 2011 ஆம் அண்டு பதவி உயர்வு பெற்று திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக 2017 வரை சேவை புரிந்தார்.

தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெறும்வரை சிறுதொழில் முயற்சியாண்;மை அமைச்சு மற்றும் பொருளாதார அமைச்சு, பிரதேச அபிவிருத்தி அமைச்சு. புனர்வாழ்வு அமைச்சு, திறைசேரி இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு, போக்குவரத்து அமைச்சுக்களில் உதவி செயலாளராகவும் கடமையாற்றினார்.  மேலும் மேற்படிப்பிற்காக புலமை பரிசில் மூலம் இந்தியா ஜேர்மனி தாய்லாந்து மலேசியா இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சென்று பொது நிருவாக துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.