நியமனம்

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கணக்காளராக அக்கரைப்பற்று மண்ணைச்சேர்ந்த கணபதிப்பிள்ளை பிரகஷ்பதி மாவட்ட செயலகத்தினால் நியமிக்கப்பட்டார்.

பதில் கணக்காளராக கடந்த சில மாதங்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய இவர் இன்று பிரதேச செயலாளர் வி.பபாகரனின் முன்னிலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடமையினை பொறுப்பேற்பதற்காக வருகை தந்த அவரை பிரதேச செயலாளர் மாலை அணிவித்து கௌரவித்து வரவேற்றார். அத்தோடு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் இணைந்து வரவேற்பினை அளித்தனர்.

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையின் மாணவரான இவர் வியாபார முகாமைத்துவமானி பட்டத்தை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தார். பின்னர் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து 2013.08.01ஆம் திகதி தனது முதலாவது கணக்காளர் சேவையினை உகண பிரதேச செயலகத்தில் ஆரம்பித்தார்.

இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் காணப்பட்ட கணக்காளர் வெற்றிடத்திற்கு பதில் கணக்காளராக 2020.06.18ஆம் திகதி நியமிக்கப்பட்ட இவர் 2021.03.22ஆம் திகதி நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  
இறைபக்தி, விளையாட்டுத்துறை மற்றும் இசைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் சிறந்த ஒக்டப்பாட் வாத்திய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.