கடந்த நூற்றாண்டில் ஏற்படாத மிக மோசமான வெள்ளப் பெருக்கு



 கிழக்கு அவுஸ்திரேலியாவில் வெள்ளப் பெருக்குக்கு மத்தியிலும், கனமழை தொடர்வதால் தென் கிழக்கு மாகாணத்திலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த நூற்றாண்டில் ஏற்படாத மிக மோசமான வெள்ளப் பெருக்கு இதுவென்றும் கூறப்படுகின்றது.

முக்கியமாக அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலமும், சிட்னி நகரின் சில பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த வருடம் இதே பகுதி நீடித்த வறட்சியினாலும், காட்டுத் தீயினாலும், தண்ணீர்ப் பற்றாக்குறையினாலும் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போதோ கனமழையால் வெள்ளக் காடாகக் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் உலகளவில் ஏற்பட்டு வரும் தீவிர கால நிலை மாற்றம் தான் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற தீவிரமான காலநிலை மாற்ற விளைவுகளை நாம் இனியும் சந்திக்க நேரிடலாம் என்றும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 18 000 இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டும், 38 பிராந்தியங்கள் பேரழிவு மண்டலங்களாக அறிவிக்கப் பட்டும் உள்ளன. 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சுமார் 54 000 மக்கள் வெள்ளத்தால் இடம்பெயர்ந்திருக்கலாம் என்றும் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் சில நகரங்கள் தனிமைப் படுத்தப் பட்டிருக்கலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மாரிசன் கூறுகையில், வடக்கு நியூசவுத்வேல்ஸில் சுமார் 35 சமூகங்கள் தனிமையில் சிக்கியுள்ளதாகவும், மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

இதுவரை 700 இற்கும் அதிகமான வெள்ள மீட்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வெள்ள அனர்த்தத்தால் இதுவரை யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.