வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களும் போராட்டத்தில்


 க.கிஷாந்தன்)

 

இராகலை மாகுடுகலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இராகலை. மாகுடுகலை மற்றும் கிளன்டெவன் ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் தொடர்ந்து 17 வது நாளாக மேற்கொண்டு வருகின்ற வேலை  நிறுத்த போராட்டத்திற்கு வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இன்று (23.03.2021) மாகுடுகலை சந்தியில்  போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

 

இந்த போராட்டத்தில் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களான தமிழ்மாறன், ஜனார்த்தனன், ஹரிச்சந்திரன், சண்முகம், கலியுகநாதன் மலையக மக்கள் முன்னணியின் அமைப்பாளர் யோகேஸ்வரன் செல்வராஜ் உப தலைவர் ஜெயக்குமார் புதிய ஜனநாயக மாக்சிஸ்ட் லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் மகேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

மாகுடுகலை மற்றும் கிளன்டவன் ஆகிய தோட்டங்கள் இப்பொழுது மத்திய வங்கி பிணை முறி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் என்பவரின் முகாமைத்துவத்தின் கீழ் செரண்டிப்பிட்டி இலங்கை பெருந்தோட்டம் என்ற கம்பணி முகாமைத்துவத்தின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.

 

அதேநேரத்தில் மத்துரட்ட பெருந்தோட்ட கம்பணியின் கீழ் இத்தோட்டங்கள் இயங்குவதாக தொழிலாளர்களுக்கு கூறிவிட்டும், சம்பளம் மற்றும் பெயர்காடுகளை மத்துரட்ட பெருந்தோட்ட கம்பணியின் பெயர் பதித்து வழங்கிவிட்டும், தோட்டத்தை வேறொரு கம்பணி நிர்வாகம் செய்வதாக ஆர்பாட்டத்தில் கலந்து  கொண்ட உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வலப்பனை பிரதேச  சபை உறுப்பினர் தமிழ்மாறன் ஜனார்த்தன்

 

மாகுடுகலை பெருந்தோட்ட நிர்வாகம் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை வேலைக்கு அமர்த்தியிருப்பது தொடர்பாக பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நுவரெலியா உதவி தொழில் ஆணையாளர் தோட்ட நிர்வாகத்திற்கு ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை அங்கிருந்து அகற்றுவதற்கு தான் யோசனை முன்வைப்பதாக கடிதம் மூலம் அறிவித்திருந்த போதிலும் அதனை இதுவரையில் தோட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்த தவறிவிட்டது.

 

இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்தும் 17 வது நாட்களாக இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நாங்கள் இந்த கோட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரதேச சபை உறுப்பினர்கள் என்ற வகையில்  இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம்.

 

அதே நேரம் இன்று (23.03.2021) தோட்ட நிர்வாகத்துடன் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.நாங்களும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்.

 

இன்று தேயிலை தோட்டங்கள் எல்லாம் காடாகியிருக்கின்றது.அதனை திருத்துவதற்கு தோட்ட நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுப்பதாக தெரியவில்லை.இவ்வாறு நடந்து கொண்டால் தோட்டங்கள் எப்படி இலாபத்தில் இயங்கும்.

 

தோட்ட நிர்வாகத்தில் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவதை எந்த காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.இது எங்களுடைய மக்களை அச்சுறுத்துகின்ற செயலாகவே நாங்கள் பாரக்கின்றோம்.