விமர்சனத்துக்குள்ளான ஆடுகளம்


 


இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி இன்று அஹமதாபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்று, முதலில் பேட் செய்த இங்கிலாந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது செஷன் முடிவில் ஓரளவு நல்ல நிலையில் இருந்த அணி, மூன்றாவது செஷனில் மீண்டும் சொதப்பி ஆட்டமிழந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருக்கிறது. தவறான அணுகுமுறை, மோசமான ஷாட்களால் இன்று தடுமாறிய இங்கிலாந்து, அணி தேர்வால் நாளை சிக்கலுக்கு உள்ளாகவும் வாய்ப்பும் ஏற்ப்பட்டிருக்கிறது.

விமர்சனத்துக்குள்ளான ஆடுகளம்

இந்தத் தொடர் தொடங்கியதிலிருந்தே ஆடுகளங்கள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகிவருகின்றன. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் சுழலுக்குச் சாதகமாக இருந்ததாக பிரச்னை உண்டானதால், இந்தப் போட்டிக்கான ஆடுகளம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஓரளவு பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. ஆனால், இரண்டு அணி கேப்டன்களுமே சுழலுக்குச் சாதகமாகவே இந்த ஆடுகளமும் இருக்கும் என்றே கருதினார்கள்.

இன்று இரு அணிகளின் பிளேயிங் லெவன் தேர்வும் அதையே சுட்டிக்காட்டியது. அஷ்வின், அக்‌ஷர், வாஷிங்டன் என அதே மூன்று ஸ்பின்னர்களோடு களமிறங்கியது இந்தியா. கடந்த போட்டியில் ஒரேயொரு முழுநேர ஸ்பின்னரோடு மட்டும் களமிறங்கிய இங்கிலாந்து, இம்முறை டாம் பெஸ்ஸையும் அணியில் சேர்த்துக்கொண்டது. அதுமட்டுமல்லாமல், ஜோ ரூட் கடந்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதால், காயத்தால் அவதிப்பட்டுவரும் ஆர்ச்சருக்குப் பதிலாக பேட்ஸ்மேன் லாரன்சை அணியில் சேர்த்துக்கொண்டனர். வெறும் மூன்று முழுநேர பந்துவீச்சாளர்களோடு களமிறங்கியது அந்த அணி.

இவர்கள் இப்படி எதிர்பார்த்திருக்க, ஆடுகளம் சுழலுக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. பந்து பேட்டை நோக்கி நன்றாகவே வந்தது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் பௌன்ஸ், மூவ்மென்ட் கிடைத்தது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டுக்கும் சம அளவில் கைகொடுக்கும் சாதாரண ஆடுகளமாகத்தான் இது இருந்தது. இருந்தும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் முதல் செஷனில் அவர்களை கடினமான நிலைக்குத் தள்ளியது.

கடந்த பகலிரவு போட்டியில் ஆடுகளத்தைப் பலரும் விமர்சித்தபோது, "பந்து சுழலும் என்று பேட்ஸ்மேன்கள் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டே ஆடி, சுழலாத பந்துகளில் அவுட்டானார்கள்" என்று கோலி உள்ளிட்ட ஒருசிலர் பேட்ஸ்மேன்களின் தவறுகளை சுட்டிக் காட்டினார்கள். இன்று நடந்ததும் அதுவேதான். பல இங்கிலாந்து விக்கெட்டுகள் இப்படித்தான் வீழ்ந்தன. விக்கெட் வீழ்ச்சியைத் தொடங்கிவைத்த டாப் சிப்லியின் விக்கெட் இப்படிதான் வீழ்ந்தது. அக்‌ஷர் படேல் வீசிய பந்து சுழலும் என நினைத்து விளையாடி போல்டானார். ஆறாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.

Surjeet Yadav/Getty Images

அக்‌ஷரின் அடுத்த ஓவரிலேயே இன்னொரு ஓப்பனர் கிராளியும் வெளியேறினார். பௌலரை அட்டாக் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து கிரீஸிலிருந்து வெளியே வந்து ஆடிக்கொண்டிருந்தார் அவர். அதைப் பார்த்து, இந்திய கீப்பர் ரிசப் பன்ட் கூட "யாரோ கோபமா இருக்காங்க, யாரோ கோபமா இருக்காங்க" என்று ஸ்டம்புக்குப் பின்னால் நின்று சொல்லிக்கொண்டிருந்தார். கொஞ்சம்கூட தன் மனநிலையை மாற்றிக்கொள்ளாத கிராளி, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் இறங்கி வந்து தூக்கி அடித்தார். மிட் ஆஃப் திசையில் நின்றிருந்த முகமது சிராஜ் எளிதாக அதைக் கேட்ச் செய்தார்.

முதல் இரண்டு விக்கெட்டுகளும் தவறான அணுகுமுறையால் வீழ்ந்தது என்றால், மூன்றாவது விக்கெட் சிராஜின் அட்டகாசமான திட்டத்தால் வீழ்ந்தது. ஆஸ்திரேலியாவில் தன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய சிராஜ், கேமரூன் கிரீனை சிறப்பாகத் திட்டமிட்டு வீழ்த்தியிருப்பார். முதலில் சில பந்துகளை பேட்ஸ்மேனுக்கு வெளியே செல்லுமாறு ஸ்விங் செய்துவிட்டு, திடீரென ஒரு பந்தை இன்ஸ்விங் செய்து அவர் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார். இன்று ஜோ ரூட் விக்கெட்டை அப்படித்தான் வீழ்த்தினார் சிராஜ். குட் லென்த்தில் நான்காவது ஸ்டம்ப் லைனில் பிட்சாகி, அவுட்ஸ்விங் ஆகுமாறு தொடர்ந்து வீசியவர், திடீரென ஒரு இன்ஸ்விங் பந்தை ஃபுல் லென்த்தில் பிட்ச் செய்தார். அதைக் கணிக்காமல் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். 30 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.

"நிச்சயமாக இது 30 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழக்கும் பிட்ச் கிடையாது"

அடுத்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ இருவரும் முதல் செஷனின் மற்ற ஓவர்களை சிறப்பாகக் கையாண்டனர். வெளியே வீசப்பட்ட மோசமான பந்துகளை பௌண்டரிகளாக்கினார்கள். சிராஜ் வீசிய ஒரே ஓவரில் 3 பௌண்டரிகள் அடித்தார் பென் ஸ்டோக்ஸ். இதுவரை ஸ்டோக்ஸை அஷ்வின் 11 முறை வீழ்த்தியிருப்பதால், அஷ்வின் பந்துவீச வந்ததும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இன்று அவரை சிறப்பாகக் கையாண்டார் ஸ்டோக்ஸ். அஷ்வினின் முதல் ஓவரிலேயே இறங்கி வந்து லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் அடித்தார். ஆனால், தொடர்ந்து அப்படியே ஆடாமல் பந்துகளை சரியாகக் கணித்து விளையாடினார். அதனால், ஸ்கோர் எடுத்தாலும் விக்கெட் விழாமல் ஆடமுடிந்தது.

முன்பு இந்த ஆடுகளம் பற்றி ஹர்ஷா போக்ளே சொன்னது எந்த அளவுக்கு உண்மையானது என்று இந்த செஷனில் தெளிவாகப் புரிந்தது. ஒருசில நல்ல பந்துகளைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் எளிதாக ரன் சேர்க்க முடிந்தது. இரண்டு ஸ்பின்னர்களையும் சிறப்பாகக் கையாண்டார்கள். அப்படி வீசப்பட்ட இரண்டு நல்ல பந்துகளில், இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. செஷன் தொடக்கத்திலேயே இன்னொரு அற்புதமான பந்தால் பேர்ஸ்டோவை (28 ரன்கள்) எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற்றினார் சிராஜ். அனைவரையும் சிறப்பாகக் கையாண்டு அரைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ், வாஷிங்டன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். 121 பந்துகளைச் சந்தித்த அவர் 55 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஓலி போப், டேன் லாரன்ஸ் இருவரும் நிதானமாக ஆடினார்கள். அதேசமயம், சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்த பௌண்டரிகள் மூலம் ஸ்கோரையும் அதிகப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். போப், கிரீஸுக்கு வெளியே வந்து ஸ்பின்னர்களை எதிர்கொள்ள, பேக் ஃபூட் மூலம் ஸ்கோர் செய்துகொண்டிருந்தார் லாரன்ஸ். இந்தக் கூட்டணி நன்றாக ஆடிக்கொண்டிருந்ததாலும் அடுத்து பென் ஃபோக்ஸ் போன்ற ஒரு வீரரும் இருப்பதாலும், இங்கிலாந்து நல்ல ஸ்கோரை எடுக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், மீண்டும் தங்களின் மோசமான அணுகுமுறையால் நல்ல வாய்ப்பைக் கோட்டைவிட்டார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்.

"தைரியமாக ஆடுவதென்பது வேறு, தவறான ஷாட்களை ஆடுவது வேறு"

இறங்கி வந்து கிராளி அவுட்டானதை விமர்சித்த கவாஸ்கர், "தைரியமாக ஆடுவதென்பது வேறு, தவறான ஷாட்களை ஆடுவது வேறு" என்று கூறினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த போப், லாரன்ஸ் இருவரும் அப்படித்தான் அவுட்டானார்கள். அஷ்வின் பந்துவீச்சில் இறங்கி வந்த போப், அஷ்வினின் வேறுபாட்டில் ஏமாந்தார். பந்து கொஞ்சம் காற்றில் நின்று வர அதை சரியாகக் கணிக்காமல் லெக் ஸ்லிப்பில் கேட்சானார். அவர் 29 ரன்கள் எடுத்தார்.

லாரன்ஸும் அதேபோல் இறங்கி வந்து ஆட நினைத்து வெளியேறினார். அக்‌ஷர் படேல் பந்தில் அவர் இறங்கி வந்தார். ஆனால், இம்முறை பந்து கொஞ்சம் நன்றாகவே சுழன்றதால் அவரால் அடிக்க முடியவில்லை. கீப்பர் பன்ட் ஸ்டம்பிக் செய்ய, 46 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார் லாரன்ஸ். அதற்கு முன்பே ஃபோக்ஸும் வெளியேறியிருக்க, 188 ரன்னுக்கே எட்டாவது விக்கெட்டையும் இழந்தது இங்கிலாந்து. டெய்ல் வீரர்களை இந்திய பௌலர்களை எளிதாக வீழ்த்த, இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 205 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. அக்‌ஷர் படேல் 4, அஷ்வின் 3, சிராஜ் 2, வாஷிங்டன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணிக்கும் சீக்கிரமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே ஆண்டர்சனின் அற்புத பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் சுப்மன் கில். இந்தத் தொடரில் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கும் அவர் இன்று டக் அவுட் ஆனார். ஆனால், அதன்பிறகு ரோஹித் ஷர்மா, புஜாரா இருவரும் நிதானமாக ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். 12 ஓவர்கள் ஆடிய இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருக்கிறது.

ஆட்டம் முடிந்த பிறகு பேசிய முகமது சிராஜ், "ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கிறது. பந்து நன்றாக பேட்டை நோக்கி வருகிறது என்றார்". இப்படியொரு ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி 205 ரன்கள்தான் அடித்திருக்கிறது. "கடந்த இரண்டு போட்டிகளைவிட இன்று இங்கிலாந்து மோசமாக பேட்டிங் செய்திருக்கிறது" என்று கூறினார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.

அந்த அணிக்கு இன்னொரு சிக்கல் என்னவென்றால், ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்து ஒரேயொரு முழுநேர வேகப்பந்துவீச்சாளரை மட்டுமே அவர்கள் தேர்வு செய்தார்கள். அதனால், ஆண்டர்சனோடு, பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தொடங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே ஸ்டோக்ஸ் பந்துவீசுவதைக் குறைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் வயிற்று வலியாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் எத்தனை ஓவர் பந்துவீசமுடியும் என்ற கேள்வி எழுகிறது. பேட்டிங்குக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்லும்போது, இங்கிலாந்து ஒரு பௌலர் குறைவாக இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கப்போகிறது. கடந்த போட்டியைப்போல் இப்போதும் அணித் தேர்வு அவர்களுக்கு சிக்கலாக அமைந்திருக்கிறது!