ம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

 பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (பிப்ரவரி 06, சனிக்கிழமை) இம்ரான் கான் பிரதமராக தொடர்வதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 178 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் இம்ரான் கான்.

இதில் தாங்கள் பங்கு பெறப் போவதில்லை என நேற்றே (பிப்ரவரி 05, வெள்ளிக்கிழமை) எதிர்கட்சியினர் இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகக் கூறினார்கள்.

பாகிஸ்தானின் செனட் அவையில், ஒரு முக்கியமான இடத்துக்கு நடந்த தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியுற்ற பின், இம்ரான் கானே முன் வந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனக் கோரினார்.


நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்காகவே, பாகிஸ்தான் நாடாளுமன்றக் கீழவையில் சனிக்கிழமை மதியம் 12.15 மணிக்கு ஒரு சிறப்பு அமர்வுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. பிரதமர் இம்ரான் கான் தன் கட்சியினரோடும், தன் அரசியல் கூட்டணிக் கட்சிகளோடும் அவையில் இருந்தார்.

  இந்த அமர்வின் தொடக்கத்திலேயே, பாகிஸ்தானின் வெளியுறவுத் அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

  பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவையான நேஷனல் அசெம்பளியில், வாக்கெடுப்பு நடந்த போது, எதிர்கட்சியினர் யாரும் இல்லை என அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

  தன் கட்சியினருக்கும், தன் கூட்டணிக் கட்சியினருக்கும் வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின், நன்றி கூறினார் பிரதமர் இம்ரான் கான்.

  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

  "நேற்று மாலை நான் உங்களைப் பார்த்த போது, நாம் செனட்டில் ஹஃபீஸ் ஷேக் தேர்தலில் தோற்றது உங்களை வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் இன்று உங்களைப் பார்க்கும் போது, நான் நன்றாக உணர்கிறேன். நான் உங்களில் ஓர் அணியைக் காண்கிறேன். நம் அணி மென்மேலும் வலிமை அடைந்து கொண்டிருக்கிறது. இறைவன் உங்கள் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் சோதிப்பார்" என இம்ரான் கான் கூறினார்.

  பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி இந்த சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுத்ததற்கு, பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 91 உட்பிரிவு 7-ன் கீழ் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானின் நாடாளுமன்றக் கீழவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் கூட்டப்பட்டது என நேஷனல் அசெம்ப்ளி செயலகத்தில் இருந்து வெளியான செய்தி அறிக்கை கூறுகிறது.

  பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டப்படி, அந்நாட்டின் நாடாளுமன்றக் கீழவையில் பிரதமர் பெரும்பான்மையைப் பெறவில்லை என அதிபருக்கு திருப்தி இல்லாதவரை, இந்தப் பிரிவின் கீழ், பாகிஸ்தானின் அதிபர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

  சனிக்கிழமை காலையிலேயே பாகிஸ்தானின் மத்திய கேபினெட் அமைச்சர்கள் மற்றும் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் சந்தித்துப் பேசினர். அதில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக அவர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது என உள்ளூர் ஊடக செய்திகள் கூறுகின்றன.

  நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன் கைகலப்பு

  நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன் கைகலப்பு

  பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான அமர்வு கூடுவதற்கு முன், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் (நவாஸ்) தலைவர்கள் அதிபரின் இந்த முடிவைக் குறித்து கேள்வி எழுப்பினர்.

  முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் ககன் அப்பாசி, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியம் ஒளரங்கசீப், அசன் இக்பால் என பல தலைவர்களும் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு நாடாளுமன்ற விடுதிக்குச் சென்றனர்.

  தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி ஆதரவாளர்கள் இவர்களோடு மோதலில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

  இந்த கைகலப்பை பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுப்படுத்தினர். அதன் பிறகு பத்திரிகையாளர்களை மீண்டும் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியினர், இந்த கைகலப்புக்கு தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியினர்தான் காரணம் எனக் குற்றம்சாட்டினர்.

  நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக, எதிர்கட்சியினர் அறிவித்தனர். இது தொடர்பாக பாகிஸ்தான் குடியரசு இயக்கத் (பி.டி.எம்) தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கூடி விவாதித்தார்கள்.

  இம்ரான் கான் மீது நம்பிக்கை இல்லை என்பது செனட் தேர்தலில் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரசா கிலானி, தற்போதைய நிதி அமைச்சர் ஹஃபீஸ் ஷேக்கை தோற்கடித்ததிலேயே தெளிவாகத் தெரிகிறது என, இந்த கூட்டம் முடிந்த பிறகு சுகூரில் வைத்து பத்திரிகைகளிடம் கூறினார் மெளலானா ஃபசல் உர் ரஹ்மான்.

  பாகிஸ்தான் மக்கள் இயக்கம் மற்றும் அதனோடு அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை. எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால், வாக்கெடுப்புக்கு எந்த ஒரு அரசியல் முக்கியத்துவமும் கிடையாது எனப் பொருள் என்று குறிப்பிட்டார் ரசா கிலானி.

  ஏன் இம்ராம் கானுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை?

  ஏன் இம்ராம் கானுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை?

  இஸ்லாமாபாத்தில் செனட் இடத்துக்கு நடந்த தேர்தலில் தோற்ற பிறகு, பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார்.

  அரசுக்குப் போதுமான எண்ணிக்கையில் வாக்குகள் இருந்த போதும், எதிர்கட்சியின் யூசுஃப் ரசா கிலானி, நிதி அமைச்சர் ஹஃபீஸ் ஷேக்கைத் தோற்கடித்தார். கிலானி 169 வாக்குகளையும், ஹஃபீஸ் ஷேக் 164 வாக்குகளையும் பெற்றனர்.

  இந்த தோல்விக்குப் பிறகு பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலக வேண்டும் என எதிர்கட்சியினர் கோரினர். ஆனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவை தன் மீது நம்பிக்கை வைத்திருப்பதை நிரூபிக்க இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கோருவேன் என அறிவித்தார்.

  கடந்த வியாழக்கிழமை மாலை பாகிஸ்தான் மக்களிடம் பேசிய இம்ரான் கான், "தேர்தலில் பெரும்பான்மை இல்லை என்பது தன் மீது நம்பிக்கை இல்லை எனப் பொருளல்ல. செனட் தேர்தலைப் பயன்படுத்தி, தனக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் உள்நோக்கம். ஆனால் தானே நம்பிக்கை வாக்கெடுப்பை தானே முன் வந்து எதிர்கொண்டதாகக்" கூறினார் இம்ரான் கான்.

  தங்கள் மனதுக்கு சரி எனத் தோன்றும் விதத்தில் வாக்களிக்குமாறு தன் கட்சியினரிடம் கூறினார் இம்ரான் கான். அதோடு ஒருவேளை தான் போதுமான வாக்குகளைப் பெறாமல் தோல்வியுற்றால், அரசை விட்டுவிட்டு, எதிர்கட்சியில் அமர்ந்து கொள்வேன் எனவும் கூறினார்.

  2018-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு 176 வாக்குகளைப் பெற்று இம்ரான் கான் பிரதமரானார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தெஹ்ரிக்-இ-இன்சாஃப் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை, பாகிஸ்தான் கீழவையில் 181-ஆக அதிகரித்தது. எதிர்கட்ச்சியினரின் எண்ணிக்கை 161 ஆக இருக்கிறது.

  பிரதமர் இம்ரான் கானுக்கு வாக்குகள் பெறுவதில் உண்மையில் பெரிய சிக்கல் ஒன்றும் இருக்கக் கூடாது. காரணம் சட்டப் பிரிவு 63 A (1)(B)-ன் படி, ஒரு கட்சிக்காரர், தன் நாடாளுமன்றக் கட்சி குறிப்பிட்டதற்கு மாறாக வாக்களித்தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.