கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை


 


உலகிலேயே மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராசெனீகாவின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தற்காலிக தடை விதித்திருப்பதாக இந்தியாவின் மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சக வட்டாரத்திலிருப்பவர்கள் பிபிசியிடம் கூறினர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரும் வாரங்களில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கும்.

இந்த தற்காலிக ஏற்றுமதி தடையால், வரும் ஏப்ரல் மாத இறுதி வரை விநியோகம் பாதிக்கப்படலாம். இந்த தடையால் உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இருக்கும் 190 நாடுகள் பாதிக்கப்படலாம்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நியாயமாக கொரோனா தடுப்பு மருந்து விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வது தான் இந்த கோவேக்ஸ் திட்டத்தின் நோக்கம்.

கடந்த சில நாட்களில் பிரிட்டன், பிரேசில் உட்பட பல நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய ஆஸ்ட்ராசெனீகா கொரோனா தடுப்பூசி சரக்குகளை சீரம் இன்ஸ்டிட்யூட் தாமதப்படுத்தி இருக்கிறது.

இதுவரை இந்தியா 60 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை 76 நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதில் பெரும்பாலான டோஸ்கள் ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராசெனீகா மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது?

கொரோனா வைரஸ் தடுப்புமருந்து

பட மூலாதாரம்,REUTERS

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. நேற்று (புதன்கிழமை), இந்தியாவில் 47,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 275 பேர் இறந்தனர். 2021-ம் ஆண்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இத்தனை அதிகமாகப் பதிவானது இதுவே முதல் முறை.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்கள் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படவிருக்கிறது. எனவே கொரோனா தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

"இந்த ஏற்றுமதித் தடை தற்காலிகமானது தான். உள்நாட்டுத் தேவைக்குத் தான் முகியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்" என இந்தியாவின் மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சகத்தில் ஒருவர் பிபிசி செய்தியாளர் செளதிக் பிஸ்வாஸிடம் கூறியுள்ளார்.

ஏப்ரல் வரை தடுப்பூசி பற்றாக்குறை நிலவலாம் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மே மாதத்தில், மற்றொரு கொரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாடு அனுமதி வழங்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வழங்கப்பட்டால், நிலைமை கொஞ்சம் சீரடையலாம்.

வியாழக்கிழமை முதல் இந்தியாவிலிருந்து எந்த தடுப்பூசியும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என இந்தியாவின் மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் வலைதளம் கூறுகிறது.

"இந்தியாவில் நிலைமை சரியாகும் வரை ஏற்றுமதி எதுவும் கிடையாது" என மத்திய வெளிவிவகார அமைச்சகத்தில் இருந்து ஒருவர் ராய்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளார்.

இந்த தற்காலிக ஏற்றுமதித் தடை குறித்து மத்திய அரசோ, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவோ அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.

பின்னணி என்ன?

பிரிட்டன், பிரேசில், செளதி அரேபியா, மொராக்கோ என பல நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை, சீரம் இன்ஸ்டிட்யூட் சரியாக குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுப்பாமல் ஏற்கனவே தாமதப்படுத்தி இருக்கிறது.

கடந்த வாரத்தில் கூட, சீரம் இன்ஸ்டிட்யூட்டின் 50 லட்சம் டோஸ் தடுப்பூசி ஏற்றுமதி நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

"தற்போதைய சூழல் மற்றும் அரசின் தடுப்பூசித் திட்டத்துக்கான தேவையைப் பொறுத்து பின்வரும் காலத்தில் கூடுதலாக விநியோகிப்போம்" என சீரம் இன்ஸ்டிட்யூட்டின் செய்தித் தொடர்பாளர் அப்போது கூறினார்.

கொரோனாவைரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆண்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளுக்கு 100 கோடி டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் என சீரம் இன்ஸ்டிட்யூட் கூறியிருந்தது.

ஒரு மாதத்தில் 60 - 70 மில்லியன் டோஸ் தடுப்பூசியைத் தயாரிக்க முடியும் என கடந்த 2021 ஜனவரியில் கூறியது சீரம் இன்ஸ்டிடியூட். இதில் ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராசெனீகா மற்றும் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் ஆகிய இரண்டுமே அடக்கம். இதில் நோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு இன்னும் இந்தியாவில் முறையான உரிமம் பெறப்படவில்லை.

அதே காலகட்டத்தில், தன் மாதாந்திர உற்பத்தியை 100 மில்லியன் டோஸாக வரும் மார்ச் முதல் அதிகரிக்க இலக்கு வைத்திருப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட், பிபிசியிடம் கூறி இருந்தது. ஆனால் உற்பத்தி இதுவரை அதிகரிக்கப்படவில்லை என சமீபத்திய சரிபார்ப்பில் தெரிய வந்திருக்கிறது.

இந்திய அரசு, கடந்த ஜனவரி 16-ம் தேதி தன் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கியது. கொரோனாவின் இரண்டாவது அலை வரலாம் என்கிற பயத்தில் இதுவரை 4.7 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

ஏழு மாத காலத்துக்குள் 600 மில்லியன் டோஸ் மருந்துக்ளைச் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அப்படி என்றால் மாதத்துக்கு 85 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டும்.

Post a Comment

[facebook][blogger]

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.