கடைசி போட்டியில் வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா


 


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டில் வெற்றி பெற்றிருந்தன. இன்றைய போட்டியில் வென்றதன் மூலம் 3-2 என்ற கணக்கில் இந்தத் தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்தியா.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆனால் இந்த முடிவு தவறானது என்பதை இந்தியாவின் பேட்டிங் உணர்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்களும், அணித் தலைவர் விராட் கோலி 52 பந்துகளில் 80 ரன்களும் எடுத்தனர். ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ரோஹித் ஆட்டமிழக்க கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நிலைத்து நின்றார்.

சூர்ய குமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் 17 பந்துகளை எதிர்கொண்டு முறையே 32 மற்றும் 39 ரன்கள் எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.

IND vs ENG டி20: 5வது போட்டியில் களம் இறங்கினார் டி. நடராஜன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் நான்கு போட்டிகளில் களம் இறக்கப்படாத தமிழக வீரர் டி. நடராஜனுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. நான்கு ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்த அவர் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.

225 ரன்கள் எனும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி தனது ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை.

தொடக்க வீரர் ஜேசன் ராய் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டிருந்த நிலையில் 'டக் அவுட்' ஆனார்.

தொடக்கம் சிறப்பாக இல்லாவிட்டாலும் இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மலான் ஆகியோர் ஓரளவு நிலைத்து நின்று விளையாடினர். எனினும், இது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

பட்லர் 52 ரன்களுக்கும் மலான் 68 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 20 ஓவரின் இறுதியில் எட்டு விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.