இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை பிறழ் கோவிட் திரிபு


 


பிரிட்டன், ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸின் புதிய இரட்டை பிறழ் திரிபு இந்தியாவில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் 18 மாநிலங்களில் பரவலாக சேகரிக்கப்பட்ட வைரஸ் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்கள் கிடைத்துள்ளன.


சேகரிக்கப்பட்ட 10 ஆயிரத்து 787 மாதிரிகளில், பிரிட்டனில் பரவிய வைரஸ் பிறழ் திரிபு 736 மாதிரிகளுடன் ஒத்துப்போகிறது. இதேபோல, 34 வைரஸ் திரிபு, தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸுடனும் ஒரு திரிபு பிரேஸிலில் உருமாறிய கொரோனா வைரஸுடனும் ஒத்துப் போகிறது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இந்த ஆய்வறிக்கை விவரம் வெளிவந்துள்ளது.


ஆனால், இந்த புதிய வகை திரிபுக்கும் வைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகரிக்கும் தொடர்பு இல்லை என்று இந்திய அரசு கூறுகிறது.


புதன்கிழமை நிலவரப்படி இந்தியாவில் 47 ஆயிரத்து 262 வைரஸ் பாதிப்புகளும் 275 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டிலேயே இதுதான் ஒரே நாளில் பதிவான மிக அதிகபட்ச பாதிப்பு அளவாக அறியப்படுகிறது.


இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சார்ஸ் கோவிட் மரபணு மாறும் வைரஸ் தொடர்பான ஆய்வை நடத்தும் 10 தேசிய பரிசோதனைக் கூடங்கள் அங்கம் வகிக்கும் அமைப்பு, சேகரித்த மாதிரிகளில் மரபணு மாற்றக்கூறுகளை அடையாளம் காண சோதனைகளை மேற்கொண்டது. உயிரணுவில் உள்ள வைரஸ் மரபணு கூறுகளின் தொடரை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்துவது இந்த அமைப்பின் நோக்கம்.


இந்தியாவின் மேற்குப் பகுதி மகாராஷ்டிராவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மீதான பகுப்பாய்வில், கடந்த டிசம்ப மாதத்தில் E484Q மற்றும் L452R பிறழ் திரிபுடன் ஒப்பிடும்போது, மாதிரிகளின் தன்மை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது என்று இந்திய அரசு கூறுகிறது.


இந்த இரட்டை பிறழ்வுதான் எதிர்ப்புத்திறனை வலிவிழக்க வைத்து தொற்றை ஏற்படுத்தும் என்கிறது இந்திய சுகாதாரத்துறை.


கொரோனா வைரஸ்

ஆனால், இந்த பாதிப்பு அளவுக்கும் புதிய பிறழ் திரிபுக்கும் தொடர்பில்லை என்றும் அதே அரசு கூறுகிறது.


இந்தியாவில் புதிய இரட்டை உருமாறிய திரிபு மற்றும் வைரஸ் திரிபு கண்டறியப்பட்டாலும், சில மாநிலங்களில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்புக்கு இவைதான் காரணம் என்பதை நிரூபிக்கக் கூடிய அளவிலான எண்ணிக்கையில் இந்த பாதிப்பு இல்லை என்பதே இந்திய அரசின் விளக்கம்.


மரபணு மூலக்கூறுகளை பிரித்துப் பகுப்பாய்வு செய்யும் முயற்சிகளை இந்திய அரசு மேலும் வேகப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் அரசை வலியுறுத்திய வேளையில், இந்த புதிய திரிபு வேகமாக மக்களிடையே பரவாமல் இருப்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மூத்த தொற்று நோய் பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் ஷாஹித் ஜமீல் பிபிசியின் செளதிக் பிஸ்வாஸிடம் இந்த மாத தொடக்கத்தில் கூறினார்.


கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் அறிவிக்கும் முன்பு அமைச்சர்களிடம் ஆலோசித்தாரா நரேந்திர மோதி?

கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கும் முன் நரேந்திர மோதி யாரிடம் ஆலோசித்தார்?

கோவிட் தடுப்பூசி: தாமதப்படுத்தும் இந்தியா, அதிர்ச்சியில் பிரிட்டன்

இந்தியாவில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் முதலாவதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு, அதன் மூலக்கூறுகளை பகுப்பாய்வு செய்ய முற்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா ஐந்தாக உள்ளது.


இதுநாள்வரை 11.7 மில்லியன் பாதிப்புகளும், 1.60 லட்சம் உயிரிழப்புகளும் நாட்டில் பதிவாகியுள்ளது. இதற்கு மத்தியில் வைரஸ் பிறழ்வு திரிபுவை அடையாளம் காணும் முயற்சியும் தொடர்கிறது.


இந்த மாத தொடக்கத்தில் திடீரென உயர்ந்த வைரஸ் பாதிப்புகள், இந்தியா எதிர்கொள்ளும் சிக்கலான கட்டம் என்று நிபுணர்கள் அழைக்கிறார்கள். ஏற்கெனவே கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்தி சோர்வடையத் தொடங்கியிருக்கிறது இந்திய சுகாதாரத்துறை.


இந்தியாவின் பல மாநிலங்கள் ஏற்கெனவே சில கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. ஊரடங்கு, கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொது முடக்கம் அதில் அடங்கும்.


இரண்டு முக்கிய நகரங்களான டெல்லியும் மும்பையும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் கூடும் நெரிசலான பகுதிகளில் கொரோனா துரித பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த நிலையில், அடுத்தடுத்து நடக்கும் முன்னேற்றங்கள் ஒட்டுமொத்த மக்களின் கவனமும் அரசு எடுக்கப்போதும் நடவடிக்கை மீது திரும்பியிருக்கிறது.