பேட்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா, அதிரடி காட்டிய ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்

 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, நேற்று (ஏப்ரல் 24, சனிக்கிழமை) மாலை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணித் தலைவர் சஞ்சு சாம்சன், இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

தொடக்கத்திலிருந்தே நிதானமாக விளையாடத் தொடங்கி இருந்தது நிதிஷ் ரானா, சுப்மன் கில் இணை. ஆனால் 5.4-வது ஓவரின் போது, பட்லரின் அதிவிரைவு ரன் அவுட்டால் அந்த ஜோடி பிரிய நேர்ந்தது. சுப்மன் கில்லின் விக்கெட் வீழ்ந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன் விக்கெட் வீழ்த்தும் படலத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது.

அடுத்து வந்த ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணாவோடு ரன் குவிப்பில் இறங்கினார். ஆனால் சேதன் சகாரியா வீசிய 8.1-வது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து தன் விக்கெட்டை இழந்தார். மீண்டும் 25 ரன்களுக்குள் கொல்கத்தா அணியின் மற்றொரு அதிரடி இணை உடைக்கப்பட்டது.

அடுத்து களமிறங்கிய சுனில் நரேன் ரன் குவிப்பில் இறங்க விரும்பி, வெறும் 6 ரன்களில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 10 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

ராகுல் திரிபாதி

பட மூலாதாரம்,BCCI/IPL

10.2-வது ஓவரில் ராகுல் மற்றும் இயான் மார்கனுக்கு இடையில் ரன் ஓடுவதில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக, தேவையின்றி மார்கனின் விக்கெட் பறிபோனது. ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் டக் அவுட்டாகி வெளியேறினார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் இயான் மார்கன்.

நீண்ட நேரமாக பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த கொல்கத்தா அணிக்கு, தினேஷ் கார்த்திக் ராகுல் திரிபாதி இணையின் போது தான் கொஞ்சம் ஆட்டத்தில் பிடி கிடைத்தது.

15.2-வது ஓவரில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் வீசிய பந்தை ராகுல் திரிபாதி தூக்கி அடிக்க, அது பராகின் கையில் சிரமம் கொடுக்காமல் தஞ்சமடைந்தது. ராகுல் கார்த்திக் இணை முறிந்தது.

அடுத்து தினேஷ் கார்த்திக்குடன் கை கோர்த்த ஆண்ட்ரே ரஸ்ஸலும் அதிக ரன்கள் எதையும் குவிக்காமல் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும் 25 ரன்களோடு தன் விக்கெட்டைப் இழந்தார்.

சேதன் சகரியா பிடித்த தினேஷ் கார்த்திக்கின் கேட்சை வர்ணனையாளர்கள் குறிப்பிட்டுப் பாராட்டினர்.

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 133 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

சுப்மன் கில்லை ரன் அவுட் செய்து பட்லர் தொடங்கி வைத்த விக்கெட் வீழ்த்தலை, மொத்த அணியும் சிறப்பாகச் செய்திருந்தது.

க்ரிஸ் மோரிஸ் 4 ஓவர்களை வீசி, 23 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். உனத்கட், சேதன் சகரியா, முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெடை வீழ்த்தி இருந்தனர்.

முஸ்தஃபிசுர், சகாரியா, உனத்கட் என மூன்று இடது கை ஸ்பின்னர்களும் கொல்கத்தாவின் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்ததில் முக்கிய பங்காற்றினர் எனலாம்.

134 ரன்களைக் குவித்தால் வெற்றி என களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஜெய்ஸ்வால் & பட்லர்

பட மூலாதாரம்,BCCI/IPL

கொல்கத்தா 5.4-வது ஒவரில் தான் தன் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3.2-வது ஓவரிலேயே பட்லரின் விக்கெட்டை வெறும் 5 ரன்களுக்கு இழந்தது. அடுத்து களமிறங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் தலைவர் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடத் தொடங்கினார்.

ஜெய்ஸ்வால் - சாம்சன் இணை 19 ரன்களில் பிரிந்தது. அடுத்து ஷிவம் தூபே சாம்சனோடு இணைந்து கொண்டார். இதில் தூபே அவ்வப் போது அதிரடி காட்டினாலும் சாம்சன் நிதானம் காத்தார். இந்த இணை 39 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்களைக் குவித்தது.

அடுத்து களமிறங்கிய ராகுல் தீவட்டியா 5 ரன்களில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். டேவிட் மில்லர் - சாம்சன் இணை நிதானமாக பந்துகளை எதிர்கொண்டு ராஜஸ்தானின் வெற்றியை உறுதிப்படுத்தினர

  சாம்சன் 41 பந்துகளை எதிர்கொண்டு 42 ரன்களை எடுத்திருந்தார். டேவிட் மில்லர் 23 பந்துகளுக்கு 24 ரன்களைக் குவித்திருந்தார். பெரிய வாண வேடிக்கைகள் எதுவும் இல்லை என்றாலும் ராஜஸ்தான் நிதானமாக தங்கள் வெற்றி இலக்கை அடைந்தது..

  இந்த போட்டியில் பேட்டிங்கில் தங்கள் அணி சிறப்பாக செயல்படவில்லை என கூறினார். கிட்டத்தட்ட 40 ரன்களைக் கொல்கத்தா அணிகுறைவாக அடித்திருந்ததாகவும், எனவே பந்துவீச்சாளர்கள் அதிகம் பங்களிப்பு வழங்க வேண்டி இருந்தது எனவும் கூறினார் இயா மார்கன்.

  சஞ்சு சாம்சனோ, தன் வெற்றியை பெரிதாகக் கொண்டாடாமல், க்ரிஸ் மோரிஸைப் பாராட்டி பேசினார். பஞ்சாப் அணிக்கு எதிராக வான வேடிக்கை காட்டிய சஞ்சு சாம்சன், தற்போது நிதானம் காட்டி மீண்டும் பலரின் மனதை ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் வென்றிருக்கிறார்.

  இந்த போட்டிக்குப் பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் 5-ல் 2 போட்டிகளில் வென்று 6-வது இடத்தில் இருக்கின்றனர். கொல்கத்தா இதுவரையிலான 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று 8-வது இடத்தில் இருக்கின்றனர்.

  ஐபிஎல் 2021 புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், இரண்டாமிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதவிருக்கின்றன.

  இரு அணிகளுமே பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டிருப்பதால் போட்டி வேறு லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது