ஐபிஎல் தொடரிலிருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள் சொல்வது என்ன?

 


இந்தியாவைத் திணற வைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவின் இரண்டாவது அலை கிரிக்கெட் போட்டிகளையும் விட்டுவைக்கவில்லை. நடைபெற்று வரும் 14-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஒருவர் பின் ஒருவராக முக்கிய வீரர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டை ஏற்கெனவே நாட்டுக்குத் திரும்பி விட்ட நிலையில், ஆடம் ஸாம்பா, கென் ரிச்சர்ட்சன் ஆகியோரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து பாதியில் வெளியேறி இருக்கின்றனர்.

முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறி, தமிழக சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகினார். ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அவர் ஆடிவந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

"எனது குடும்பமும் உறவினர்களும் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். இந்தக் கடினமான தருணத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்க நான் விரும்புகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

நிலைமை சீராகி எல்லாம் நல்லபடியாக மாறிவிட்டால், விரைவில் களத்துக்கு திரும்பிவிடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிக் கொண்டிருந்த ஆண்ட்ரூ டையும் இதே போன்றதொரு காரணத்தைக் குறிப்பிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று போட்டிகளில் இருந்து வெளியேறி சிட்னி நகருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார்.

ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு எல்லையை மூடுவது தொடர்பாகவும், கொரோனாவுக்காக உருவாக்கப்பட்ட பயோ பப்பிள் விதிமுறைகளில் ஏற்பட்ட சிக்கல்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

"நிலைமை மோசமடைவதற்கு முன்னதாக நாட்டுக்குத் திரும்பி விட வேண்டும் என்று நினைத்தேன்" என ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

நாடு திரும்புவதற்காக மும்பையில் இருந்து புறப்பட்ட ஆண்ட்ரூ டை, கத்தார் தலைநகர் தோஹா வழியாக சிட்னி நகருக்குச் சென்றடைந்தார்.

"நான் நாட்டுக்குத் திரும்பியது குறித்துத் தெரிந்ததும் அனைவரும் கவலை கொண்டார்கள். பலர் என்னிடம் பேசினர். எந்த வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன் என்பதைத் தெரிந்து கொள்ள பலர் விரும்பினார்கள் " என்று டை கூறினார்.

ASHWIN

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அஸ்வின்

பிரிட்டனைச் சேர்ந்த வீரர்கள் யாரேனும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி நாடு திரும்ப இருக்கிறார்களா என்பது குறித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியங்களிடம் தகவல் இல்லை. ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது வீரர்களின் தனிப்பட்ட விருப்பம். கிரிக்கெட் வாரியங்கள் இதில் தலையிடுவது இல்லை.

கொரோனா கட்டுப்பாட்டுகள் மற்றும் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் ஐபிஎல் போட்டிகள் தொடர வேண்டும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆடும் இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் இயான் மோர்கன் கூறினார்.

இந்தியாவில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருப்பதை அறிந்திருப்பதாகக் கூறும் மோர்கன், நாடு முழுவதும் முடக்கத்தில் இருந்தாலும் முறையான வழிகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம் என்கிறார்.

"எங்களது பயோ பபுளுக்கு வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து நாங்கள் அவ்வப்போது பேசிக் கொள்கிறோம். நாம் நல்வாய்ப்புக் கிடைத்தவர்கள் என்று நினைத்தபடி தொலைவில் இருந்து பாதிப்பைப் பார்த்துக் கொண்டிருப்பது சரியாகப் படவில்லை." என்றார் மோர்கன்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியிட்ட அறிக்கையில் சுழற்பந்து வீச்சாளர் ஸாம்பாவும் வேகப் பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சனும் மீதமிருக்கும் போட்டிகளில் ஆட மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது. வீரர்களின் முடிவுக்கு மரியாதை அளிப்பதாகவும் முழு ஆதரவை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ், கொரோனாவுக்கான "பிஎம் கேர்" நிதிக்கு 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் பணத்தை அளித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 29 லட்சம் ரூபாய்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இந்தியா மீதான தனது அன்பு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கம்மின்ஸ், இந்தியாவில் நல்ல மனம் படைத்த, அன்பான பலரைச் சந்தித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

"முழு நாடும் கொரோனாவால் முடங்கி இருக்கும் நிலையில் அழுத்தத்தில் இருக்கும் மக்கள் சில மணி நேரங்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு ஐபிஎல் உதவும் என அரசு நினைப்பதாக எனக்குக் கூறப்பட்டது" என கம்மின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

"நான் செய்திருப்பது மிகத் தாமதமானது என்று தெரியும். இருப்பினும் வெளிப்படையாக அறிவிப்பதன் மூலம் உணர்வுகளை ஒன்று திரட்டி நடவடிக்கையாக மாற்றி, அதன் மூலமாக மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும் என நம்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.