சமுர்த்தி அபிமானி' புத்தாண்டு சந்தை

 .சுகிர்தகுமார் 0777113659   புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின்  கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்களை இணைத்து 'சமுர்த்தி அபிமானி' புத்தாண்டு சந்தையினை நடாத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைவாக திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் இணைந்து திருக்கோவில் பிரதேசத்தில்  சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தையினை இன்றும் நாளையும் (9,10) விநாயகபுரம் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்; தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட புத்தாண்டு சந்தை அங்குரார்ப்பண நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் திருக்கோவில் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன்; சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ரி.பரமானந்தம் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி பிரிவினரால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் வியாபார நிலையங்களை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
பின்னர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டனர்.

இதேநேரம் இங்கு சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி வங்கி மூலம் நடமாடும் சேவை நடாத்தப்பட்டு உணவு முத்திரை பணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி பொருட்களும் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் சுகாதார விதிமுறைகள் தொடர்பாகவும் விழிப்பூட்டியதை அவதானிக்க முடிந்தது.