துறைமுக நகரின் சொத்து முகாமைத்துவ நிறுவனத்துடன் அஜித் நிவாட் கப்ராலின் மகனுக்கு தொடர்பு

 


தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கம் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சட்டத்தரணி சுனில் வட்டகல, துறைமுக நகர பிரதேசத்திற்குள் சொத்துக்களை முகாமைத்துவம் செய்வதற்கான நிறுவனம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

59 ஆம் 60 ஆம் சரத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவன சட்டத்தின் பிரகாரம், துறைமுக நகர பிரதேசத்திற்குள் சொத்துக்களை முகாமைத்துவம் செய்வதற்கான நிறுவனம் ஒன்றை உருவாக்க முடியும் என சுனில் வட்டகல குறிப்பிட்டார்.

அந்த முகாமைத்துவ நிறுவனமே துறைமுக நகரத்திற்குள் சேவைகளை வழங்கும் எனவும் கொழும்பு துறைமுக நகர பகுதியில் அதிகாரம் வழங்கப்பட்டவர்கள், வசிப்பவர்கள், விருந்தினர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் 60 ஆ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எரிவாயு விநியோகம், நீர் விநியோகம், மின்சார விநியோகம், இணையத்தள மற்றும் தொடர்பாடல் வசதிகள், கழிவுநீர் அகற்றல் சேவைகள், வடிகாலமைப்பு சேவைகள், குப்பை சேகரித்தல், அப்புறப்படுத்தல் போன்ற சேவைகளை வழங்குவதற்கு சட்டத்தின் கீழ் பிரத்தியேகமான நிறுவனம் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், முகாமைத்துவ சேவை வழங்கும் நிறுவனத்தை தேடிப் பார்க்கையில், அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின் மகன் சத்துர கப்ரால் தொடர்புபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக சுனில் வட்டகல கூறினார்.

அது தொடர்பான வர்த்தக அட்டைகளை காணக்கிடைத்ததால், அஜித் நிவாட் கப்ராலின் மகன் சத்துர கப்ராலின் நிறுவனத்திற்கே அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த முகாமைத்துவ நிறுவனத்தை உருவாக்கவே அவசர அவசரமாக இன்று சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுகின்றனர். இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்றை பெற்றுக்கொண்டால் அது கோடிக்கணக்கான ரூபா பெறுமதியானதாக அமையும். சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தேசக்குற்றத்தை செய்ய வேண்டாம்

என சுனில் வட்டகல தெரிவித்தார்.

இது தொடர்பாக சத்துர கப்ராலிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. தமது தந்தையான இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலிடம் அதனை வினவுமாறு அவர் பதிலளித்தார்.Advertisement