எந்த இனமாக இருந்தாலும் மழை நீர் கடலை சென்றடையும் வழிமுறைகளை தடுக்க முடியாது

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு  காணிப்பிரச்சினை வருகின்ற போது  அதில் தலையிடுவதற்கு அதிகாரமில்லை  என்கின்ற விடயத்தை கூறி கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தை சார்ந்தவர்கள் மக்களை தூண்டுகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின்  பாராளுமன்ற  உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் சொறிக்கல்முனை பகுதியில் சனிக்கிழமை(10) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது


காணிப்பிரச்சினை வருகின்ற போது  அதில் தலையிடுவதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அதிகாரமில்லை என்கின்ற விடயத்தை கூறி கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தை சார்ந்தவர்கள் மக்களை தூண்டுகின்றார்கள்.முறைகேடான சட்டவிரோத செயல்களை செய்வதை தூண்டுகின்றார்கள்.

இந்த பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமாயின் அரசாங்கம் வர்த்தமானி மூலம் அதை செய்வதற்கு ஆவணசெய்ய வேண்டும்.நிர்வாக ரீதியான ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால் தான் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் இழுத்தடிப்பு செய்யப்படுவதாக அமைச்சர் சமல் ராஜபக்சவினை சந்தித்து பேசும் போது அறிய முடிந்தது.

1989 ஆண்டு கல்முனை வடக்கு செயலகம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இருந்து கல்முனை 1 சி பகுதியானது தற்போது உள்ள நிலையில் கல்முனை தெற்கு பிரதேச செயலக எல்லையாக மாற்ற எடுக்கப்படும் நடவடிக்கையானது இனநல்லுறவை பாதிக்கும்.தனிநபர் ஒருவர் செய்கின்ற காரியத்தினால் இரு இனங்களிற்கு இடையில் முறுகல் நிலை ஏற்படுவதனை ஏற்க முடியாது.

எந்த இனமாக இருந்தாலும் மழை நீர் கடலை சென்றடையும் வழிமுறைகளை தடுக்க முடியாது.இவ்வாறான பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கடைகளை கட்டுவதற்கு இடமளிக்க கூடாது.இவ்வாறான பிரச்சினைகளினால் நாட்டில் பல இடங்களில் பேரழிவுகள் இடம்பெற்றிருக்கின்றன.

சட்டவிரோத செயற்பாடுகளினால் வடிகால்கள் மூடப்பட்டிருப்பதனால் இவ்வாறான அழிவுகள் இடம்பெறுகின்றன.அரச உத்தியோகத்தரை தாக்கிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அரச உத்தியோகத்தர் மீதான தாக்குதல் விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.அதுவும் இச்சம்பவமும் இன முரண்பாட்டினை   ஏற்படுத்தும் சம்பவமாக உள்ளமையினால் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.