அக்கரைப்பற்று இராணுவமுகாம் பிரிகேடியர் விமலரெத்தினவிற்கு கௌரவம் வி.சுகிர்தகுமார் 0777113659 

 அக்கரைப்பற்று இராணுவமுகாமில் இயங்கிவரும் இராணுவத்தின் 241ஆம் படைப்பிரிவின் பிரதானி பிரிகேட் கொமாண்டர் பிரிகேடியர் டபிள்யு.வி.ஜே.கே.ஜானக விமலரெத்தின ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச மக்கள் சார்பாக இன்று பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கடந்த இரு வருடங்களுக்கு மேலாக 241ஆம் படைப்பிரிவின்  பிரிகேட் கொமாண்டராக கடமையாற்றி மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கியமைக்காகவும் பதவி உயர்வு பெற்று இராணுவத்தலைமையகத்தில் இயங்கும் ஆட்சேர்ப்பு பணியகத்தின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றமையினை பாராட்டும் முகமாகவும் இக்கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற இக்கௌரவிப்பு நிகழ்வில் 241ஆம் படைப்பிரிவின் பிரதானி பிரிகேட் கொமாண்டர் பிரிகேடியர் டபிள்யு.வி.ஜே.கே.ஜானக விமலரெத்தின கலந்து கொண்டதுடன் இராணுவ உயர் அதிகாரிகள் பிரதேச செயலக கணக்காளர் உள்ளிட்ட அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆலயங்கள் உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சுகாதார நடைமுறைகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதேச செயலாளரினால் பிரிகேடியரின் மக்கள் சேவைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது.

அவரது காலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, களப்பு பாதுகாப்பு போதைப்பொருள் தடுப்பு இவற்றோடு பலகாலம் தீர்வு காணப்படாமல் இருந்த திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கான தீர்வும் சேதனப்பசளை உற்பத்தி வேலைத்திட்டம் போன்ற பல்வேறு சேவைகள் தொடர்பில் நினைவு படுத்தினார்.

மேலும் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமான தொடர்புகள் பேணப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிட்டார்.

 இதன் பின்னர் பிரிகேடியர் பிரதேச செயலாளரால் மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்;த்தி கௌரவிக்கப்பட்டார். பின்னராக வாழ்த்துபாவும் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னராக உரையாற்றிய பிரிகேடியர் தனது இரண்டு வருட சேவைக்காலத்தில் பொதுமக்களுக்கு ஆற்றிய பல்வேறு சேவைகள் தொடர்பில் எடுத்துரைத்தார். இதேநேரம் இவ்வாறானதொரு பாராட்டு நிகழ்வினையும் கௌரவிப்பினையும் வழங்கிய பிரதேச செயலாளர் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.