"எங்கள் குழந்தைகள் பாலுக்குச் சாகிறார்கள்.. நீங்கள் அமைதிகாக்கிறீர்கள்" ஆப்கானில் இருந்து உருக்கமாக கடிதம்


 



ஆப்கானிஸ்தான் திரைப்பட இயக்குநர் சஹ்ரா கரிமி திரையுலகினருக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். 

காபுலை தலிபான் கைப்பற்றுவதற்கு முன்னர் எழுதியுள்ள உருக்கமான கடிதமொன்றில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். உலகின் மௌனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நொருங்கிய இதயத்துடனும் எனது அழகிய தேசத்தினை தலிபானிடமிருந்து பாதுகாப்பதில் நீங்கள் எங்களுடன் இணைந்துகொள்வீர்கள் என்ற பெரும் நம்பிக்கையுடனும் நான் இதனை எழுகின்றேன். 

கடந்த சில வாரங்களில் தலிபான்கள் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் எங்கள் மக்களை படுகொலை செய்துள்ளார்கள் – குழந்தைகளை கடத்தியுள்ளனர், சிறுமிகளை தங்களின் உறுப்பினர்களிற்கு திருமணத்திற்காக விற்றுள்ளனர், பெண்ணொருவர் அணிந்த ஆடைக்காக அவரை கொலை செய்துள்ளனர், நாங்கள் மிகவும் இரசித்த நகைச்சுவை நடிகர் ஒருவரை அவர்கள் சித்திரவதை செய்துகொலைசெய்துள்ளனர், ஒரு கவிஞரை கொலை செய்துள்ளனர்.அரசாங்கத்தின் ஊடக கலாச்சார பிரிவின் தலைவரை அவர்கள் கொலை செய்துள்ளனர். அரசாங்கத்துடன் தொடர்புள்ளவர்களை அவர்கள் கொலைசெய்துள்ளனர்,எங்களில் சில ஆண்களை பொதுவெளியில் தூக்கிலிட்டுள்ளனர், அவர்கள் மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயரச்செய்துள்ளனர், மாகாணங்களில் இருந்து தப்பியோடிய அவர்கள் காபுலில் முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்கள் அங்கு சுகாதாரமற்ற மோசமான நிலையில் உள்ளனர். அங்கு சூறையாடல்கள் இடம்பெறுகின்றன. குழந்தைகள் போதிய பால் இன்மையால் முகாம்களில் உயிரிழக்கின்றன. 

இது மனிதாபிமான நெருக்கடி ஆனால் உலகம் அமைதியாக உள்ளது, நாங்கள் இந்த மௌனத்திற்கு பழகியவர்கள் ஆனாலும் இது நியாயமான விடயமில்லைஎன்பது எங்களிற்கு தெரியும். எங்கள் மக்களை கைவிடும் இந்த தீர்மானம் தவறானது என்பது எங்களிற்கு தெரியும், இந்த அவசர அவசரமான படை விலக்கல் எங்கள் மக்களிற்கு இழைக்கப்பட்ட துரோகம்,மேற்குலகிற்காக ஆப்கான் பனிப்போரில் வென்றவேளை நாங்கள் செய்த அனைத்திற்கும் இழைக்கப்பட்ட துரோகம். அவ்வேளை எங்கள் மக்கள் மறக்கப்பட்டார்கள் – அது தலிபானின் இருண்ட ஆட்சிக்கு வழிவகுத்தது, தற்போது 20 வருடத்திற்கு பின்னர் எங்கள் நாடு பலவிடயங்களை சாதித்த பின்னர் எங்கள் இளம் தலைமுறையினர் பல விடயங்களை சாதித்த பின்னர் – அவை அனைத்தும் கைவிடப்படலாம். எங்களிற்கு உங்கள் குரல் அவசியம், ஊடகங்களும் அரசாங்கங்களும் உலகின் மனிதாபிமான அமைப்புகளும் தலிபானுடான சமாதான உடன்படிக்கை நியாயமானது என்பது போல மௌனமாக உள்ளனர்,அது எப்போதும் நியாயபூர்வமானதில்லை. அதனை அங்கீகரித்தது மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான நம்பிக்கையை தலிபானிற்கு அது வழங்கியுள்ளது. 

சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலம் முழுவதும் தலிபான்கள் எங்கள் மக்களை ஈவிரக்கமின்றி நடத்தியுள்ளனர். ஒரு திரைப்படக்கலைஞராக எனது நாட்டில் எதனை உருவாக்குவதற்காக நான் பாடுபட்டேனோ அது வீழ்ச்சியடைப்போகின்றது. தலிபான் ஆட்சியை கைப்பற்றினால் அவர்கள் கலைகளிற்கு தடைவிதிப்பார்கள். நானும் எனது சக திரைப்பட தயாரிப்பாளர்களும் அவர்களின் பட்டியலில் அடுத்ததாக இடம்பெறக்கூடும். அவர்கள் பெண்களின் உரிமைகளை மீறுவார்கள், நாங்கள் எங்கள் வீடுகளின் குரல்களில் நிழல்களை நோக்கி தள்ளப்படுவோம்,எங்கள் வெளிப்பாடுகள் மௌனமாக்கப்படும். 

தலிபான்கள் ஆட்சியிலிருந்தவேளை பாடசாலைகளில் எந்த மாணவியும் இருக்கவில்லை, ஆனால் அதன் பின்னர் 9 மில்லியன் மாணவிகள் கல்விகற்கின்றனர். இது மிகவும் மகத்தான விடயம், தலிபானின் பிடியில் வீழ்ந்த ஹேரத் நகரில் பாடசாலைகளில் கல்வி கற்பவர்களில் 50 வீதமானவர்கள் மாணவிகள். இது உலகம் அறிந்திராத பெரும் பலாபலன். 

கடந்த மூன்று வாரங்களில் தலிபான்கள் பல பாடசாலைகளை அழித்துள்ளனர்.இரண்டு மில்லியன் மாணவிகள் மீண்டும் பாடசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். என்னால் இந்த உலகை புரிந்துகொள்ள முடியவில்லை. என்னால் இந்த மௌனத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை, நான் எனது நாட்டில் நின்று எனது தேசத்திற்காக போரிடுவேன் ஆனால் என்னால் இதனை தனியாக செய்ய முடியாது. எனக்கு உங்களை போன்ற சகாக்களின் உதவி அவசியம்,இங்கு என்ன நடைபெறுகின்றது என்பது குறித்து உலகம் அக்கறை கொள்ளும் நிலையை உருவாக்குங்கள். உங்கள் நாடுகளிற்கு- முக்கியமாக ஊடங்களிற்கு ஆப்கானில் என்ன நடக்கின்றது என்பதை அறிவிப்பதன் மூலம் எங்களிற்கு உதவுங்கள். ஆப்கானிற்கு வெளியே எங்கள் குரல்களாக ஒலியுங்கள். 

தலிபான் காபுலை கைப்பற்றினால் நாங்கள் இணைய தொலைத்தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டினை இழந்துவிடுவோம். தயவு செய்து உங்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைஞர்களை எங்கள் குரல்களாக ஆதரவளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இது உள்நாட்டு யுத்தமில்லை, இது நிழல்யுத்தம், அமெரிக்காவிற்கும் தலிபானிற்கும் இடையிலான உடன்படிக்கை காரணமாக இந்த யுத்தம் எங்களின் மீது திணிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயத்தினை தயவு செய்து ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளுங்கள்,உங்கள் சமூக ஊடகங்களில் எங்களை பற்றி எழுதுங்கள். உலகம் எங்களை கைவிடக்கூடாது, தயவு செய்து உங்களின் திரைப்பட தயாரிப்பாளர்களையும் கலைஞர்களையும் எங்கள் குரலாக கருதி ஆதரியுங்கள், உங்கள் ஊடகங்களுடன் இந்த விடயங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்,உங்கள் சமூக ஊடகங்களில் எங்களை பற்றி எழுதுங்கள். உலகம் எங்களை நோக்கி திரும்பாது, எங்களிற்கு உங்கள் ஆதரவும்,ஆப்கான் பெண்கள் சிறுவர்கள் கலைஞர்கள் திரைப்படதயாரிப்பாளர்களிற்கான உங்கள் குரலும் தேவை. இதுவே எங்களிற்கு தற்போது தேவைப்படும் பெரும் உதவி.

நன்றி தினக்குரல்


- கயல்