சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட வழக்கு, தனுஷிடம் நீதிபதி சரமாரி கேள்வி



 தனது ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்குக் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்த நடிகர் தனுஷிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2015ஆம் ஆண்டில் நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். அந்தக் காருக்கு 60.66 லட்சம் நுழைவு வரியாக விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் தனுஷ். இதை விசாரித்த நீதிமன்றம், 50 சதவீத வரியைச் செலுத்தி காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளலாம் என குறிப்பிட்டது. வரியை ரத்துச் செய்யக் கோரும் வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்தது.


இந்த நிலையில், அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளிப்பதாக நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.


இதையொட்டி இன்று காலையில் விசாரணை துவங்கியதும் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலுவையில் உள்ள வரியைக் கட்டிவிட தனுஷ் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.


அப்போது நீதிபதி அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.


"நீங்கள் தாக்கல் செய்த மனுவில் தனுஷ் என்ன பணியில் இருக்கிறார் என்பதைக் குறிப்பிடவில்லையே... ஏன்? பணியையோ தொழிலையோ குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா?" என்றார் நீதிபதி.


"சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். ஐம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட வரி செலுத்தும்போது நீங்கள் ஏன் செலுத்தக் கூடாது?


பால்காரர் ஜிஎஸ்டி கட்ட முடியவில்லை என நீதிமன்றத்தை நாடுகிறாரா?


மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையைப் பயன்படுத்தும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டியதுதானே.



நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால், செலுத்த வேண்டிய வரியைச் செலுத்துங்கள். தனுஷ் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை வணிக வரித்துறை கணக்கீடு செய்து பகல் 2.15 மணிக்குள் கூற வேண்டும்.


வணிகவரி கணக்கீட்டாளர் நேரில் ஆஜராக வேண்டும்," என்று கூறிய நீதிபதி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.


நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்குக் கோரியபோது இதே நீதிபதிதான் விஜய்யை சரிமாரியாக விமர்சித்து, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். அந்த வழக்கில் அபராதம் செலுத்த இடைக் காலத் தடை விதித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.