யாருக்காக கதை சொன்னார் பவித்ரா? 

“சுகாதார அமைச்சு பதவியில் திடீர் மாற்றம் வருமென நான் நினைக்கவில்லை. வாழ்க்கையில் எது நடந்தாலும் அதனை மகிழ்ச்சியுடனேயே ஏற்கவேண்டும். எல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொண்டு, கிடைத்ததைக் கொண்டு சேவை ​செய்வேன் என்றார், போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி. 

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற பிரியாவிடை சந்திப்பின்போதே அமைச்சர் பவித்ரா இவ்வாறு குறிப்பிட்டார். 

அத்துடன், மன்னர் கால கதையொன்றைக் கூறிய அவர், “ மன்னனும் ஆலோசகரும் வேட்டைக்குச்சென்றுள்ளனர். அப்போது மானொன்று வந்துள்ளது. அதை நோக்கி மன்னர் அம்பெய்துள்ளார். இலக்கு தப்பியது. இதனால் கவலைடைந்த மன்னன், என்றுமில்லாத வகையில் குறி தவறிவிட்டனவே ஏன்? எனக் மன்னன் கேட்கையில், எல்லாம் நன்மைக்கே என? ஆலோசகர் பதிலளித்துள்ளார். 

சற்று தூரம் சென்ற பின்னர், அப்போது மன்னன், தன்னுடைய வாளை உருவியுள்ளார். தன்னுடைய கையின் சிறுவிரலில் ஒருதுண்டு வாளால் வெட்டுபட்டு கீழே விழுந்துவிட்டது. இதுபற்றியும் ஆலோசகரிடம் மன்னன் வினவியுள்ளார். அப்போதும் இதுவும் நன்மைக்குதான் என ஆலோசகர் பதிலளித்துள்ளார். 

இதனால், கடுமையாக கோபம் கொண்ட மன்னன், அந்த ஆலோசகரை, குழிக்குள் தள்ளிவிட்டு, வேறு திசையில் பயணித்தார். 

போய்கொண்டிருந்தபோது பலிபூஜை செய்வதற்காக மனிதனொருவரை, அந்த காட்டில் இருந்தவர்கள் தேடிக்கொண்டிருந்தனர். மன்னரை பிடித்து நீராட்டி, பூஜைக்கு கொண்டுசென்றனர். முழுமையாக உடலமைப்பை கொண்ட மனிதரொருவரையே பலி கொடுக்க வேண்டும். ஆனால் மன்னரின் விரல்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் அவர் விடுவிக்கப்பட்டார். 

அப்போதுதான், எல்லாம் நன்மைக்கே என ஆலோகர் கூறியது மன்னனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதன்பின்னர், அந்த குழியைத் தேடிச்சென்று, அதிலிருந்து ஆலோசகரை மீட்டெடுத்தார் மன்னர். 

குழியிலிருந்து வெளியேவந்த ஆலோசகர், என்னை குழிக்குள் நீங்கள் தள்ளியதும் நன்மைக்கே என்றார். ஏனெனில் உங்களுடன் நான் வந்திருந்தால் என்னை பலி கொடுத்திருப்பார்கள் என ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, தனக்கு வழங்கப்பட்ட இந்த பதவி மாற்றமும் நன்மைக்கே எனக் கூறி கதையை முடித்தார் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.


- கயல்