பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம்,பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து



 நியூசிலாந்து அரசு வழங்கிய பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக பாகிஸ்தானில் விளையாடும் திட்டத்தை ரத்து செய்துள்ளனர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள்.


பாகிஸ்தானில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவிருந்தன.


ராவல்பிண்டியில் வெள்ளியன்று ஒரு நாள் போட்டி தொடர் தொடங்கவிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கிட்டதட்ட 10 நாட்கள் பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நியூசிலாந்து அணி தற்போது திடீரென போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தொடரை ரத்து செய்துள்ளது.


அடுத்த மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் விளையாடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


நியூசிலாந்து அணி வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என்பதால் அந்நாட்டு அரசு மேற்கொண்டு எந்த தகவலையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.


இந்திய ஹாக்கியின் 41 ஆண்டு பதக்க தாகம் தணிந்தது எப்படி? முன்னாள் கேப்டன் பாஸ்கரன் பேட்டி

விராட் கோலியுடன் இணையும் தோனி - இந்தியா கொண்டாடுவது ஏன்?

"பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு இது பெரிய அடியாகத்தான் இருக்கும். அவர்கள் நன்றாக ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். இருப்பினும் எங்கள் வீரர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம். இதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி என நாங்கள் நம்புகிறோம்," என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத் தலைவர் டேவிட் ஒயிட் தெரிவித்துள்ளார்.


18 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் விளையாட வந்தது. ராவல்பிண்டியில் ஒருநாள் தொடரும், லாகூரில் டி20 போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.


2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் பேருந்து தாக்க்கப்பட்ட பிறகு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் பாகிஸ்தான் அணி முதன்முதலில் தங்கள் நாட்டில் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடியது.


பாகிஸ்தானில் அச்சுறுத்தல்கள் காரணமாக சர்வதேச அணிகள் போட்டிகளை நடத்துவதில் இருந்து பின்வாங்கி வருகின்றன.


இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்டில் வெகுசில பார்வையாளர்களுக்கு மத்தியில் விளையாடி வருகிறது.




`பாதுகாப்பு ஏற்பாட்டில் எந்த சமரசமும் இல்லை`

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் பிரதமரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெனை தொடர்பு கொண்டு நியூசிலாந்து அணிக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்திருந்தார்.


"இன்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர், தங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வந்துள்ளதுள்ளதாகவும் போட்டி தொடரை தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்" என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


"பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் அரசு நியூசிலாந்து அணி வருகையை ஒட்டி எந்தவித சமரசமும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு இந்த உறுதியை நாங்கள் கொடுத்தோம்.


பிரதமர் இம்ரான் கான் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டாவிடம், உலகிலேயே சிறந்த உளவு அமைப்பு தங்களிடம் இருப்பதாகவும், கிரிக்கெட் அணிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்."


"நியூசிலாந்து அணிக்கான பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு தங்கியிருந்த சமயம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்தியுடன் இருந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டிகளை தொடர்ந்து நடத்த விரும்புகிறது. பாகிஸ்தான் மற்றும் உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இதுகுறித்து ஏமாற்றம் அடைவர்" என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.