மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது


 


(க.கிஷாந்தன்)

பொருளாதார நெருக்கடி நிலைமை இருந்தாலும் தனிவீட்டுத் திட்டம் உட்பட மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்படாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தியின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டி, புஸ்ஸலாவ பகுதியில் 17.09.2021 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

" இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் கடந்த காலங்களில் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும், வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் வீட்டுத் திட்டம் முழுமைபெறவில்லை. மக்கள் குடியமறவும் இல்லை. எனவே, மேற்படி வீட்டுத் திட்டங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும், மக்களை குடிமயர்த்துவதற்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார். மக்களுக்கு காணி உரிமையுடன் முழுமைபெற்ற தரமான வீடுகளை வழங்குவதே காங்கிரஸின் திட்டமாகும்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசி நிலங்களில் பால் பண்ணைகளை ஆரம்பிப்பதற்கான யோசனையை விவசாய அமைச்சு முன்வைத்துள்ளது. இவ்வாறான திட்டங்கள் ஊடாக எமது மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான திட்டமும் முன்னெடுக்கப்படும். இந்தியா சென்றிருந்த அமைச்சர் நாடு திரும்பியுள்ளார். அவருடன் இது சம்பந்தமாக கலந்துரையாடுவோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

கொரோனா நெருக்கடி நிலைமையால் இலங்கையில் மட்டுமல்ல முழு உலகிலும் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. இந்நிலையில் தேவையற்ற, அத்தியாவசியமற்ற சில அபிவிருத்தி திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. எனினும், மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்படாது. அவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன." - என்றார்.