வெளியிறங்கிய நபர்கள் மீது சாய்ந்தமருதில் கொரோனா பரிசோதனை : தொடர் விமர்சனங்களை சந்திக்கும் சுகாதாரத்துறை !


 


வெளியிறங்கிய நபர்கள் மீது சாய்ந்தமருதில் கொரோனா பரிசோதனை : தொடர் விமர்சனங்களை சந்திக்கும் சுகாதாரத்துறை ! 


நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம்.நியாஸின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது பிரதேசத்தில் அத்தியவசியத் தேவையின்றி வெளியிறங்கிய நபர்கள் மீது பாதுகாப்பு துறையினரும் சுகாதாரத்துறையினரும் பீ.சி.ஆர். நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அமுலில் இருக்கும் போது தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வரும் சந்தர்ப்பத்தில் வீதியில் தக்க காரணங்களின்றி  உலாவித்திரிந்தவர்களின் மீது இந்த பீ.சி.ஆர். நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து கொரோணா நோயினை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மக்களை பகிரங்கமாக கேட்டுக்கொண்டது. 


இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.  பீ.சி.ஆர். பரிசோதனைக்கு ஆளான பலரும் அத்தியவசிய தேவைக்கு தாங்கள் வெளியேறிய போது அனுமதி அட்டைகளை காட்டியும் அதனை கவனத்தில் கொள்ளாது பாதுகாப்பு படையினரை முன்னிலைப்படுத்தி தங்களுக்கு பீ.சி.ஆர். பரிசோதனை செய்ததாகவும், உள்வீதியில் இவ்வகையான பரிசோதனைகளை செய்வதாகவும் குற்றம்சாட்டி சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர். குறித்த சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார பணியாளர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த பிந்திய இரவுநேரம் வரை அர்ப்பணிப்புடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.