நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தும் விதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்கசவால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலின் பிரகாரம் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 2022 ஜனவரி 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் சபைக்கு தலைமை தாங்கி, புதிய கூட்டத்தொடரை ஜனாதிபதியே சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கவேண்டும். ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இடம்பெறும்.
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்படுவதற்கு முன்னர், நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டால் - புதிய அமர்வின் ஆரம்பத்தில் அக்கிராசன உரை இடம்பெறும். இதுமீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ஆனால், தற்போது ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை. எதிரணிகள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் பிரிதொரு நாளில் அது பற்றி சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்படலாம். தற்போதும் ஜனாதிபதியின் உரையை 'அக்கிராசன' உரை என சிலர் அடையாளப்படுத்தினாலும் 'கொள்கை' விளக்க உரை என்பதே சரியானதாகும்.
அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவ்வாறு நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படாத வகையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாக வேண்டும். அதற்கான திகதியும் குறித்தொகுக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டாலும் அக்காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிநிலை பாதுகாக்கப்படும். சபாநாயகரும் தொடர்ந்து செயற்படுவார். நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தை மீளமைக்க வேண்டிவரும்.
நாடாளுமன்றத்தில் ஏற்கனவே செயற்பட்ட தெரிவுக்குழுக்கள் புதிய அமர்வின் ஆரம்பத்தில் மறுசீரமைக்கப்படும். நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டாலும் உயர் பதவிகளை அங்கீகரிப்பது தொடர்பான அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து இயங்கும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலத்திலும் நாடாளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வரவு- செலவுத் திட்டக் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் வழமையாக நாடாளுமன்றம் 3 வாரங்கள் வரை ஒத்திவைக்கப்படும். அதன்பிரகாரம் 2022 ஜனவரி 11 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, ஜனாதிபதியின் மேற்படி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றம் வழமையாக மாதம் இரு தடவைகள் கூடும். (சனி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி ) தினங்களைத் தவிர எட்டு நாட்கள் சபை அமர்வுகள் இடம்பெறும். சிலவேளை நாட்கள் மட்டுப்படுத்தப்படலாம். வரவு- செலவுத் திட்ட விவாதத்தின் போது (ஞாயிறு, பௌர்ணமி தினங்களைதவிர) ஏனைய நாட்களில் சுமார் 21 நாட்கள் வரை சபை அமர்வு இடம்பெறும்.
(ஆர்.சனத்)

Post a Comment
Post a Comment