பனங்காட்டுப்பாலத்தினூடாக குடிநீர் இணைப்பு



 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டுப்பாலத்தினூடாக குடிநீர் இணைப்பை கொண்டு செல்லும் வேலைத்திட்டம் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம்பெறவுள்ளது.
இத்திட்டத்திற்காக அரசினால் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் விரைவில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிநீர் இணைப்பை கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கையினை பார்வையிட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்  மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பொறியியலாளர் பி.மயூரன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொறியியலாளர் ந.லோகிஸ்  கணக்காளர் க.பிரகஸ்பதி சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர் சென்றதுடன் முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
குறித்த நீர்வழங்கல் வேலைத்திட்டத்தினூடாக பனங்காடு சின்னப்பனப்பனங்காடு மகாசக்திபுரம் புளியம்பத்தை மளுவராயன் கிராமம் கண்ணகிகிராமம் உள்ளிட்ட 3000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளவர்.
இதேநேரம் கடந்த பலவருடகாலமாக ஆட்சியில் இருந்த பலரிடமும் குறித்த மக்கள் குடிநீரைப்பெற்றுத்தருமாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு அரசியல்வாதிகளும் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி இருந்தனர்.
ஆயினும் தற்போது ஆட்சியில் உள்ள பொதுஜனபெரமுன அரசாங்கத்தின் மூலமே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய அரசுக்கும் அமைச்சருக்கும் அரசியல் தலைவர்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் இணைப்பாளர்களுக்கும் இதனை முன்னின்று செயற்படுத்தும் அரச உயர் அதிகாரிகளுக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.