ஆலையடிவேம்பில் தொடரும் கொள்ளைச்சம்பவத்தால்.அச்சத்தில் மக்கள்



 


வி.சுகிர்தகுமார் 0777113659 

  அக்கரைப்பற்று 7-4 பிரிவில் உள்ள வீடொன்றில் இன்று(11) அதிகாலையும் உள்நுழைந்த திருடன் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணில் கழுத்தில் இருந்த சுமார் 10  1/2 பவுண் தாலி கொடியை அறுத்துச் சென்றுள்ளான். அத்தோடு குறித்த பெண்ணின் கணவரின் மணிபேர்ஸ்சையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்நுழைந்த திருடன் முன்கதவை திறந்து வைத்த பின்னர் மிகவும் சூட்சுமமான முறையில் கொடியை அறுத்தெடுத்து தப்பிச் சென்றுள்ளான்.
தாலி தன்கழுத்தில் இருந்து கழன்று செல்வதை உணர்ந்த பெண் சத்தமிட்டு கணவரையும் எழுப்பிய போதும் கள்வன் ஏற்கனவே திறந்து வைத்திருந்த முன் வாசல் வழியாக ஓடி சென்றதாக குடும்பத்தினாரால் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எஸ்.அப்துல் மஜீத் தலைமையிலான குழுவினர் மற்றும் அம்பாரை விசேட தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேநேரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலையடிவேம்பில் உள்ள வீடொன்றிலும் இதே பாணியில் பெண்ணொருவரின் தாலி கொடி அபகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதிகமான திருட்டுச்சம்பவங்கள் அதிகாலை வேளையில் நடைபெறும் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடரும் கொள்ளைச்சம்பவத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.  குறிப்பாக பெண்கள் தாலி கொடியுடன் நடமாட முடியாத நிலையே தோன்றியுள்ளது.
இந்நிலையில் இராணுவத்தினரும் பொதுமக்களுடன் இணைந்து குற்றச் செயல்களை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. ஆயினும் இச்செயற்பாட்டில் சமூக அமைப்புக்களும் பிரதேசத்தின் இளைஞர்களும் கைகோர்த்து செயற்படுவதன் அவசியத்தையும் இச்சம்பவங்கள் வலியுறுத்தியுள்ளது.
ஆகவே சந்தேகத்திற்கிடமானவர்கள் பிரதேசத்தில் நடமாடினால் அவர்கள் தொடர்பில் தகவல்;களை உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.