இலங்கை பொருளாதார நெருக்கடி: நடுக்கடலில் 37 மணி நேரம் போராடி தனுஷ்கோடி வந்த தமிழ் அகதிகள்








இலங்கையில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள, 2வது முறையாக தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளதாக இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான குழந்தைகளுக்கான பால் பவுடர், அரிசி, பருப்பு, கோதுமை மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கையில் வாழும் மக்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு புறப்பட்டுள்ளனர். நடுக்கடலில் படகின் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தாக தெரிவித்துள்ளனர்.

பல மணி நேர முயற்சிக்கு பின் பழுதை சரி செய்து, செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகம் சென்று சேர்ந்துள்ளனர்.

''இலங்கை நடந்த உள்நாட்டு யுத்தகாலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து, உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து, போர் முடிந்த பின் 2012ல் மீண்டும் இலங்கைக்கு புறப்படுச் சென்றோம்.

தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளோம். இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல்லாயிரம் பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைய உள்ளனர்,'' என அவர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை இலங்கை தமிழர்கள் 16 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.